
திருப்பதி ஏழுமலையான் கோவில் :
Tirupati Laddu 310th Anniversary 2025 Date : உலகப் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில். வருமானத்திலும் சாதித்து வரும் இந்தக் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து, ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாதம் என்றால் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எப்போதும் திருமலையில் மலையப்ப சுவாமியை தரிசிக்க குறைந்தது 12 மணி நேரம் முதல், சில சமயம் ஓரிரு நாட்கள் கூட காத்திருக்க வேண்டி இருக்கும்.
உலகப்புகழ் பெற்ற திருப்பதி லட்டு :
திருப்பதி ஏழுமலையானை போலவே அவருக்கு படைக்கப்படும் ”லட்டும்” உலகப் புகழ் பெற்றதாகும். இனிப்பு பண்டங்களில் ஒன்றான ‘லட்டு’ என்று சொன்னாலே முதலில் நினைவிற்கு வருவது திருமலை திருப்பதி பெருமாள்தான். திருப்பதி பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதமான ஸ்ரீவாரி லட்டுவிற்கு(Srivari Laddu) இணையான சுவையுள்ள லட்டுவை வேறு எங்குமே சுவைக்க முடியாது. அத்தகைய பெருமையைக் கொண்ட திருப்பதி லட்டு(Tirupati Laddu History) உருவானக் கதை மிகவும் சுவாரஸ்யமானது.
1715ல் ஏழுமலையானுக்கு லட்டு படைத்தல் :
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது போக்குவரத்து வசதி ஒன்று இல்லாத காலத்தில் இருந்தே திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு வழங்கவும், ஏழுமலையானுக்கு நாள்தோறும் படைக்கவும் லட்டு பிரசாதமாக கொண்டு வரப்பட்டது. 1715ம் ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதி(Tirupati Laddu Started Date) அன்றுதான் ஏழுமலையானுக்கு முதல்முறையாக லட்டு படைக்கப்பட்டது.
1803 முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் :
1803ம் ஆண்டு முதல்தான் பக்தர்களுக்கு லட்டு விநியோகம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். 'கல்யாணம் ஐயங்கார்' என்பவர்தான் பிரபலமான இந்த திருப்பதி லட்டுவை உருவாக்கியவர் என்று சொல்லப்படுகிறது. அந்தக் கால்நடையாக அல்லது மாட்டு வண்டியில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மீண்டும் தங்கள் ஊருக்கு திரும்பி செல்ல பல நாட்கள் ஆகும். எனவே, அதுவரை கெட்டுப் போகாமல் இருப்பதற்காக, லட்டு பிரசாதமாக கொண்டு வரப்பட்டது. அந்த முறை 310 ஆண்டுகளாக நீடிக்கிறது.
திருப்பதியில் மூன்று வகை லட்டுகள் :
திருப்பதி லட்டு மூன்று வகைப்படும். அவை ஆஸ்தான லட்டு, கல்யாண உத்ஸவ லட்டு, புரோக்தம் லட்டு ஆகியனவாகும். ஆஸ்தான லட்டு குங்குமப்பூ, முந்திரி, பாதாம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. இதனுடைய எடை 750 கிராம் ஆகும். முதன்மையான விழா நாட்களில் மட்டுமே இந்த லட்டு தயாரிக்கப்படும். பொட்டு என்ற மடப்பள்ளியில் பிரத்யேக கவனத்துடன் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, ஏழுமலையானுக்கு படைக்கப்படுகிறது. பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. விழாக்காலங்களில் லட்சக் கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
2008 முதல் புவிசார் குறியீடு :
கல்யாண உத்சவ லட்டு எடையும் 750 கிராம் ஆகும். திருப்பதி பாலாஜி மற்றும் தாயாருக்கு கல்யாண உத்சவம் நடைபெறும் பொழுது அதில் கலந்துக்கொள்ளும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் லட்டு ஆகும். புரோக்தம் லட்டு சராசரி திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுவது ஆகும். இந்த லட்டுவை அதிக அளவில் தயாரிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி லட்டுக்கு 2008ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது.
15 நாட்கள் கெடாமல் இருக்கும் :
திருப்பதி லட்டு மாவு, எண்ணெய், சர்க்கரை, நெய், உலர் திராட்சை ஏலக்காய்(Tirupati Laddu Ingredients) போன்றவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சரியான முறையில் சேமித்து வைத்தால், இந்த லட்டுக்கள் 15 நாட்கள் வரை கூட கெடாமல் இருக்கும். திருப்பதி பாலாஜியை(Tirupati Balaji Laddu) தரிசித்த பிறகு ஸ்ரீவாரி லட்டுவை பிரசாதமாக உண்ணும் பக்தர்கள், அதன் சுவையில் மெய்மறப்பார்கள்.
பக்தர்களுக்கு இலவச லட்டு :
திருப்பதியில் லட்டு மட்டுமே பிரசாதமாக வழங்கப்படுவதில்லை. தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், கேசரி, முறுக்கு, வடை, பாயசம், புளியோதரை, தோசை ஆகியவற்றையும் பிரசாதமாக வழங்குகிறார்கள். ஏழுமலையானை தரிசிக்க வரும் ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டுக்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும்.
===