
Parliament Monsoon Session 2025 Date: பொதுவாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் 4 கட்டங்கள் வரை நடைபெறும். அதாவது ஆண்டின் தொடக்கத்தில் குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் பின்னர் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்.
இதையடுத்து மழைக்கால கூட்டத் தொடர், குளிர்கால கூட்டத் தொடர் என நடத்தப்படுவது வழக்கம். மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில், விரைவில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.
மழைக்கால கூட்டத் தொடர் :
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கூடவுள்ள மழைக்கால கூட்டத் தொடர் ஏற்கனவே திட்டமிட்டதை விட கூடுதலாக ஒரு வாரம் நடைபெற இருக்கிறது.
சுதந்திர தின கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 13 மற்றும் 14ம் தேதிகளில் கூட்டத் தொடர் நடைபெறாது.
முக்கிய மசோதாக்கள் தாக்கல் :
முக்கிய மசோதாக்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டத் தொடர் முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள முக்கிய மசோதாக்களில் அணுசக்தி துறையில் தனியார் நுழைவதை எளிதாக்கும் சட்டமும் அடங்கும்.
எதிர்க்கட்சிகள் வியூகம் :
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர்(Operation Sindoor) தாக்குதல் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் மோதலில்(India Pakistan War) மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றன. இந்த விவகாரங்களை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப திட்டமிட்டுள்ளன. எனவே, மழைக்கால கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமே இருக்காது.
===