
வலுவிழக்கும் இந்தியா கூட்டணி :
Marxist MP John Brittas on Rahul Gandhi : இந்தியா கூட்டணியில் இருந்து ஏற்கனவே சில கட்சிகள் வெளியேறிய நிலையில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் நேற்றோடு குட்பை சொல்லி விட்டது. இதனால், இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை எதிர்த்து காங்கிரஸ் மல்லுக்கட்டுவது வேடிக்கையாக உள்ளது.
மார்க்சிஸ்டை சாடிய ராகுல் :
இந்தநிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளை எதிர்த்து போராடி வருவதாக கூறினார். சித்தாந்த ரீதியாக கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்க்க வேண்டி இருப்பதாகவும், மக்கள் நலனில் அவர்களுக்கு அக்கறையில்லை என்றும் கடுமையாக சாடினார்.
ராகுலுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் :
ராகுலின் இந்தப் பேச்சு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ், ” கேரளாவுக்கு வரும்போது எல்லாம் ராகுல் அபத்தமாகவே பேசி வருகிறார். தேவையின்றி எங்கள் கட்சியை வம்புக்கு இழுக்கிறார். அவர் இவ்வாறு பேச கேரள காங்கிரஸ் கட்சியே காரணம்.
ராகுலுக்கு மார்க்சிஸ்ட் அறிவுரை :
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல், மதச்சார்பற்ற கட்சிகளிடையே இவ்வாறு பேசி பிளவு ஏற்படுத்துவது நல்லதல்ல. இது கூட்டணி கட்சிகள் இடையே பிளவையும், குழுப்பத்தையும் உருவாக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ராகுல் பாடம் எடுக்கத் தேவையில்லை” இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் கூறினார்.
====