
மைசூரு தசரா கொண்டாட்டம் :
Mysore Dasara Festival 2025 : கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா விழாவுக்கு என தனிச்சிறப்பு உண்டு. மாநில அரசால் கொண்டாடப்படும் இந்த விழாவில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொள்வர். கிபி 1610ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மன்னர், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், விஜயதசமி(Vijayadashami 2025) காலக்கட்டத்தில் தசரா விழாவை 10 நாட்கள் கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து மைசூரு அரச குடும்பத்தினரால், தசரா விழா தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இந்த வழக்கம் தொடர்ந்தது.
415-வது தசரா விழா :
1947ல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசு சார்பில் அரசு விழாவாக தசரா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, 415வது ஆண்டு தசரா விழாவை புக்கர் பரிசு(Booker Prize) வென்ற கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக்(Banu Mushtaq) கடந்த 22ம் தேதி மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை(Mysore Chamundeshwari Temple) செய்து தொடங்கி வைத்தார்.
களைகட்டிய தசரா விழா :
தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை(Mysore Palace), சாமுண்டீஸ்வரி கோயில், கிருஷ்ணராஜசாகர் அணை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தன. 9 நாட்களாக உணவு திருவிழா, திரைப்பட திருவிழா, கிராமிய விழா, மலர்க் கண்காட்சி, பொருட்காட்சி, இசைக் கச்சேரி, இலக்கிய விழா என களைகட்டி காணப்பட்டது மைசூரு நகரம்.
நந்தி கொடிக்கு சிறப்பு பூஜைகள் :
தசரா திருவிழாவின் இறுதி நாளான நேற்று விஜய தசமியை முன்னிட்டு மைசூரு அரண்மனையில் உள்ள நந்திகொடிக்கு முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் சிறப்பு பூஜைகள் செய்தனர். மைசூரு அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி நவராத்திரி பூஜை செய்து, மன்னரும் பாஜக எம்பியுமான யதுவீர் தனியார் தர்பார் நடத்தினார்.
750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி :
இதைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா ‘ஜம்போ சவாரி’ என அழைக்கப்படும்(Jamboo Savari) யானைகளின் ஊர்வலத்தை மாலையில் தொடங்கி வைத்தார். 56 வயதான அபிமன்யூ யானை 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன்(750 KG Golden Ambari) வீற்றிருக்கும் சிலையை சுமந்து ராஜ வீதியில் கம்பீரமாக ஊர்வலம் சென்றது.
மேலும் படிக்க : குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 2025 : கொடியேற்றத்துடன் தொடக்கம்
யானைகளின் கம்பீர அணிவகுப்பு :
இதைத்தொடர்ந்து, ரூபா, காவேரி, ஸ்ரீகண்டா, தனஞ்செயா, மஹேந்திரா, கஜன், பீமா, ஏகலைவா, லட்சுமி உள்ளிட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலத்தில் கம்பீரமாக சென்றன. ராஜவீதியில் தொடங்கிய ஜம்பு சவாரி, பன்னி மண்டபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து 10 நாட்ளாக நடைபெற்று வந்த மைசூரு தசரா திருவிழா நிறைவுக்கு வந்தது.
===============