

மாத ஓய்வூதியம்
ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்கள், ஓலா, உபேர் ஓட்டுநர்கள் போன்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருகிறது.
பங்களிப்பு அடிப்படையில் பென்ஷன்
EPFO 3.0 சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
நடைமுறையில் உள்ள பென்ஷன் திட்டம்
தற்போது நடைமுறையில் உள்ள ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS), மாதம் ரூ.15,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதனால், நாட்டில் உள்ள சுமார் 41 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா மற்றும் கிக் தொழிலாளர்கள் எந்தவிதமான ஓய்வூதியப் பாதுகாப்புமின்றி உள்ளனர்.
புதிய திட்டம் மத்திய அரசு இறுதி
இந்தப் பெரிய இடைவெளியை நிரப்பும் நோக்கில், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படும் மாடல்களை ஆய்வு செய்து இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
55 வயது வரை சாதாரண வருங்கால வைப்பு நிதி
புதிய திட்டத்தின் கீழ், ஒரு ஊழியருக்கு 55 வயது ஆகும் வரை, அவரது கணக்கு ஒரு சாதாரண வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கு போலவே செயல்படும்.
அரசு பத்திரங்களில் முதலீடு
செலுத்தப்படும் தொகை, பாதுகாப்பான அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் வட்டி வரவு வைக்கப்படும்.
ஒருவர் 60 வயதை எட்டும்போது, அதுவரை சேர்ந்துள்ள மொத்தத் தொகை, 'இலக்கு ஓய்வூதியத் தொகை' (Target Retirement Sum - TRS) என்ற அடிப்படையில் ஓய்வூதியமாக மாற்றப்படும்.
சந்தையில் நிலவும் வட்டி விகிதங்களைக் கொண்டு இந்த ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
நெகிழ்வுத் தன்மையுடன் புதிய திட்டம்
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) போலல்லாமல், இந்த புதிய திட்டம் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதியம் பெறுவதற்கு இரண்டு முக்கிய வாய்ப்புகள் வழங்கப்படும்.
முதல் வாய்ப்பின்படி, உங்களின் அசல் தொகை அப்படியே பாதுகாப்பாக இருக்கும், அதிலிருந்து கிடைக்கும் வட்டியை மட்டும் நீங்கள் மாத ஓய்வூதியமாகப் பெறலாம்.
உங்கள் கணக்கில் ரூ.1 கோடி இருந்தால், அதற்கு 8% வட்டி கிடைப்பதாகக் கொண்டால், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வட்டியாகக் கிடைக்கும். இது மாதத்திற்கு சுமார் ரூ.66,000 ஓய்வூதியமாக உங்களுக்கு வழங்கப்படும்.
இரண்டாவது வாய்ப்பின்படி, தேவைப்பட்டால் அசலிலிருந்தும் ஒரு பகுதியை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஆரம்ப ஆண்டுகளில் அதிக ஓய்வூதியம் தேவைப்படுபவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
முக்கியப் பயனாளிகள்
இந்தத் திட்டத்தின் மூலம் ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.
இந்த நிறுவனங்கள் தங்களது வருவாயில் இருந்து 1% முதல் 2% வரை ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்குப் பங்களிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
3.5 கோடி கட்டட தொழிலாளர்கள்
நாடு முழுவதும் உள்ள 3.5 கோடிக்கும் அதிகமான கட்டடத் தொழிலாளர்களும் இதில் இணைக்கப்படுவார்கள்.
இதற்காக, மாநில நல வாரியங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள ரூ.70,000 கோடி செஸ் நிதியைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.15,000-க்கு மேல் சம்பளம் வாங்குவதால் தற்போது EPS திட்டத்தில் சேர முடியாத ஊழியர்களும், இந்த புதிய திட்டத்தில் இணைந்து தங்களின் ஓய்வூதிய காலத்தில் சேமிப்பைத் தொடங்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
====================