

குழாய் மூலம் எரிவாயு சப்ளை
நாடு முழுவதும் குழாய் வழி இயற்கை எரிவாயு கட்டமைப்பு உள்ள பகுதி களில், இரட்டை எரிவாயு இணைப்புகளை அதாவது எல்பிஜி, பிஎன்ஜி படிப்படியாக அகற்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
எல்பிஜி சிலிண்டர் ஒப்படைப்பு
புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, வீட்டில் குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்பு பெற்ற நுகர்வோர், அது பயன்பாட்டிற்கு வந்த 30 நாட்களுக்குள் தங்களிடம் உள்ள எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பை அதிகாரப் பூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.
ஆன்லைன் பரிவர்த்தனை - பாதுகாப்பு விதிமுறைகள்
ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் தவறுதலாக வேறு நபர்களுக்குப் பணம் அனுப்புவதை தடுப்பதற்காக புதிய பாதுகாப்பு அம்சம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சரியானவருக்கு பணம் அனுப்புதல்
இதன்படி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் ஒருவருக்குப் பணம் அனுப்பும்போது, பயனர்கள் தங்களது ‘யுபிஐ பின்' (UPI PIN) எண்ணை உள்ளிடுவதற்கு முன்பே, பணம் பெறுபவரின் வங்கிக் கணக்கில் உள்ள அதிகாரப்பூர்வமான அசல் பெயர் திரையில் தோன்றும்.
இதன் மூலம் தவறான நபர்களுக்குப் பணம் மாறுவது முற்றிலும் தடுக்கப்படும்.
ஏடிஎம் பரிவர்த்தனை கண்காணிப்பு
வங்கிகள் வழங்கும் மாதாந்திர இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகள் (3 முதல் 5 முறை) இனி கடுமையாகக் கண்காணிக்கப்படும். அதன்படி, சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த வரம்பை தாண்டிய பிறகு மேற்கொள்ளப்படும் பணம் எடுத்தல், மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் பேலன்ஸ் சரிபார்ப்பு போன்ற சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
பான்கார்டு - கட்டுப்பாடுகள் தளர்வு
வாடிக்கையாளர்களுக்குச் சாதகமான ஒரு மாற்றமாக, வங்கிக்கிளையில் ரூ.50,000 வரையிலான ரொக்க வைப்புத்தொகைக்கு பான் கார்டு எண்ணைக் குறிப்பிடுவதில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உயர் மதிப்புள்ள பரிசுகள் மற்றும் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான சொத்துப் பதிவுகளுக்கு பான் கார்டு எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-------------------