

டெல்லி தீவிரவாத தாக்குதல்
The Module was planning to carry out Hamas-style terror attack, using Drones in Delhi, NIA Probe : டெல்லி செங்கோட்டை அருகே நடதப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ, தாக்குதலில் தொடர்புடைய காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்களை அதிரடியாக கைது செய்தது.
ஹரியானாவின் ஃபரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையை சேர்ந்த டாக்டர் உமர் முகமது தான் வெடிப் பொருட்கள் நிரப்பிய காரை ஓட்டி வந்தவர் என தெரியவந்தது. அதே பல்கலையை சேர்ந்த சில டாக்டர்களுக்கும் இந்த பயங்கரவாத சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீவிரவாதிகள் கூட்டுச்சதி
அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஜஸிர் பிலால் வானி, தற்கொலைப்படை பயங்கரவாதி உமர் முகமதுவுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உமர் முகமது தாக்குதல் நடத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை ஜஸிர் பிலால் வானி வழங்கி உள்ளார்.
ஹமாஸ் பாணியில் தாக்குதல்!
அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், டில்லியில் ஹமாஸ் பாணியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது அம்பலமானது.
தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு
ட்ரோன்களில் கேமரா மற்றும் பேட்டரி பொருத்தப்பட இருந்தன. நெரிசலான இடங்களில் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்த, சக்திவாய்ந்த குண்டுகள் அவற்றில் பொருத்தப்படவிருந்தன. ஆனால் இந்த பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.
சிரியா, ஈராக், இஸ்ரேல் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஹமாஸ் மற்றும் ஐஎஸ் போன்ற பயங்கரவாத குழுக்களால் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அதேபோல் டெல்லியில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது முறியடிக்கப்பட்டு உள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.
அமலாக்கத்துறை சோதனை
இதனிடையே, டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அல்-பலாஹ் பல்கலை. அறங்காவலர்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உமர் பணியாற்றிய அல்-பலாஹ் பல்கலை.யின் நிதி பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தி வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒயிட் காலர் பயங்கரவாதிகள் வேலை பார்த்த அல்-பலாஹ் பல்கலையில் காலை முதல் சோதனை நடந்து வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
====