
இஸ்ரோ - நாசா கைகோர்த்து சாதனை :
Earth Observation NISAR Satellite Update : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.
இதற்கான ஒப்பந்தம் 2014ம் ஆண்டு கையெழுத்தானது. சுமார் 12,000 கோடி செலவில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளின் தயாரிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவு பெற்றன.
விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப்-16 :
இதையடுத்து, நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-16 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஜிஎஸ்எல்வி ராக்கெட் நேற்று மாலை 5.40 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.
வெற்றிகரமாக நிலைநிறுத்தம் :
தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்னர் 745 கி.மீ. உயரத்தில், திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிசார் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 2,392 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இதில் எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல்முறை. இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்பு, பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெறமுடியும்.
பூமியை சுற்றி வரும் நிசார் செயற்கைகோள் :
இந்த செயற்கைகோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து, துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும். குறிப்பாக, பூகம்பம், சுனாமி, எரிமலை வெடிப்பு மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அபாயங்களில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள தேவைப்படும் தரவுகளை முழுமையாக வழங்கும். நிசார் அனுப்பும் தரவுகளை நாசா, இஸ்ரோ மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் பெறமுடியும்.
மேலும் படிக்க : பூமியை ஸ்கேன் செய்யும் ‘நிசார் செயற்கைகோள்’ : விண்ணில் பாய்கிறது
ஜிஎஸ்எல்வி ராக்கெட் - சாதிக்கும் இந்தியா :
இது ஜிஎஸ்எல்வியின் 18-வது திட்டமாகும். இதில் 14 திட்டங்கள் வெற்றி அடைந்துள்ளன. அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பான், பிரான்ஸ், ஐரோப்பிய கூட்டமைப்பு விண்வெளி மையங்களுடன் இணைந்து, வருங்காலத்தில் இஸ்ரோ பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
====