

இந்தியாவில் உள்ள சாலைகள் இரண்டே ஆண்டுகளில் அமெரிக்க சாலைகள் போன்று, தரமானதாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதி கட்கர் உறுதியளித்து இருக்கிறார்.
ஏஎன்ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான செலவினங்களை மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டினார்.
இந்திய சாலை உள்கட்டமைப்பு ஏற்கெனவே மாறிவிட்டதாக குறிப்பிட்ட அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவற்றின் தரம் சர்வதேச ஒப்பீட்டுக்கு இணையாக இருக்கும் என்றார்.
அப்போது இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு, அமெரிக்காவுக்கு இணையாக இருக்கும் என்று உறுதியளித்த அவர், இதனால் வாகனங்களின் வேகம் அதிகப்படுத்தப்படுவதோடு, தளவாடச் செலவும் கணிசமாக குறையும் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது, 25 பசுமை வழி விரைவுச் சாலைகள், 3,000 கி.மீ துறைமுக இணைப்பு நெடுஞ்சாலைகள், ஆன்மிக சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் ஆகிய திட்டங்கள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நடைபெற்று வருவதாக கட்கரி கூறினார்.
10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.