

பாஜக தேசியத் தலைவர்
Nitin Nabin sworn in as national president of BJP : பாஜகவின் 11வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் முடிந்த போதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், பிகார் மாநில அமைச்சராக இருந்த நிதின் நபின் (45), கட்சியின் செயல் தலைவராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய தலைவர் - வேட்பு மனுத்தாக்கல்
பாஜகவில் உள்கட்சித் தேர்தல் முடிந்த நிலையில், 12வது தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு நேற்று பெறப்பட்டது.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நிதின் நபின் சார்பில் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி டாக்டர் கே.லட்சுமணிடம் வழங்கினர். அப்போது மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், புபேந்திர யாதவ், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நிதின் நபின் சார்பில் மனுக்கள்
பின்னர், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் நிதின் நபின் சார்பில் மேலும் ஒரு தொகுப்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், புஷ்கர் சிங் தாமி, நயாப் சிங் சைனி, பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நிதின் நபினுக்கு ஆதரவாக மனுக்கள்
செயல் தலைவர் நிதின் நபின் சார்பில் மொத்தம் 37 மனுக்கள் பெறப்பட்டன. அவை அனைத்தும் உரிய படிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள, செல்லத்தக்க மனுக்கள் என்று பரிசீலனையில் கண்டறியப்பட்டது.
நிதின் நபின் போட்டியின்றி தேர்வு
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பாஜக அமைப்புத் தேர்தலில் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக 45 வயது - நிதின் 45 வயது
பாஜகவைப் போலவே நிதினுக்கும் 45 வயது. கட்சியின் தேசியத் தலைவர் பதவியை இளம் வயதில் எட்டிப் பிடித்த முதல் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.
மோடி முன்னிலையில் பதவியேற்றார்
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா, நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இளம் தலைவர் நிதின் நபின்
பிகாரை சேர்ந்த நிதின் நபின், தனது 26வது வயதிலேயே சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் 5வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார்.
சட்டமன்ற தேர்தல்கள் - நிதின் நபினுக்கு சவால்
பாஜகவின் செயல் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாமில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களை இவரது வழிகாட்டுதலில் தான் பாஜக எதிர்கொள்ள இருக்கிறது.
===============