

பாரம்பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம்
Deepavali has been officially inscribed on UNESCO's Representative List of the Intangible Cultural Heritage of Humanity : யுனெஸ்கோ என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு, பாரம்பரிய சின்னத்தின் சரித்திர காலம், கலைபடைப்புத் தன்மை உள்ளிட்ட சிறப்புகளின் அடிப்படையில், சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது.
தீபாவளி பண்டிகை
அந்த வகையில், யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்து இருந்தார்.
இந்தியாவுக்கு சர்வதேச அங்கீகாரம்
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ” இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள், மனித குலத்தின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் (UNESCO List of Intangible Cultural Heritage of Humanity) தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பதவி காலத்தில், இந்தியாவின் கலாசார பாரம்பரியங்களுக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இந்த புதிய மைல்கல்லும், அதன் பாதையை வலுப்படுத்துகிறது.
தீபாவளியைக் கொண்டாடும் நோக்கமான, நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் போன்றவற்றை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கௌரவம் உதவுகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடி பாராட்டு
இந்த அறிவிப்பினை வரவேற்று பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரை, தீபாவளி நமது கலாச்சாரம் மற்றும் வாழ்வியலுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி - நாகரிகத்தின் ஆன்மா
இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது வெளிச்சத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது இத்திருவிழாவின் உலகளாவிய பிரபலத்துக்கு மேலும் பங்களிக்கும். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தீபாவளி பண்டிகை
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் கொண்டாடப்படும் பெரிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. கலாச்சார பெருமை மிக்க இந்த விழா, மக்களை ஒன்றிணைக்கிறது. பட்டாசு, புத்தாடை, இனிப்புகள் என கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இல்லாத இந்த விழா, மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தேடி தருகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
=======================