
PM Narendra Modi Visit Manipur : 2023-ல் மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். மணிப்பூரில் உள்ள பல்வேறு இனக்குழுக்களை வன்முறையைக் கைவிடவும், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். மணிப்பூரில் நம்பிக்கையுடன் கூடிய ஒரு புதிய விடியல் உருவாகி வருவதாக அவர் கூறினார்.
சுரசந்த்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்தார்.
எல்லாக் குழுக்களையும் அமைதியின் பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன், இதன்மூலம் உங்கள் கனவுகளை நனவாகவும், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் முடியும். இன்று, நான் உங்களுடன் நிற்கிறேன் என்று உறுதியளிக்கிறேன். இந்திய அரசு மணிப்பூரின் மக்களுடன் உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
இன்று காலை இம்பால் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் செல்வதற்கு சாதகமற்ற சூழல் காரணமாக, சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுரசந்த்பூருக்கு சாலை மார்க்கமாக பயணிக்க முடிவு செய்தார்.
சுரசந்த்பூரில், இன வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசிக்கும் மக்களை பிரதமர் சந்தித்து உரையாடினார். கனமழை இருந்தபோதிலும், 1.5 மணி நேர பயணத்தை மேற்கொண்டு சாலை மார்க்கமாக அவர் அங்கு சென்றார், மக்களுடன் உரையாடுவதற்காக இந்த முடிவை எடுத்தார்.
பிரதமர் மோடி மேலும் பேசும்போது , மணிப்பூர் எப்போதும் நம்பிக்கையின் பூமியாக இருந்து வந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது வன்முறையின் கடினமான காலகட்டத்தை சந்தித்தது. முகாம்களில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை நான் சந்தித்தேன். அவர்களுடனான உரையாடலுக்குப் பிறகு, நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட ஒரு புதிய விடியல் மணிப்பூரில் எழும்பி வருகிறது என்றார்.
மணிப்பூரில் பல இனக்குழுக்களுடன் அண்மையில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தங்களைப் பற்றி பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார்.
எந்தவொரு பகுதியின் வளர்ச்சிக்கும் அமைதி முக்கியமானது. கடந்த 11 ஆண்டுகளில், வடகிழக்கில் பல மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளன. மக்கள் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுத்து, வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். மலைப்பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் உள்ள பல குழுக்களுடன் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பது குறித்து நான் திருப்தி அடைகிறேன். இது, தொடர்பு, மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலுடன் அமைதியை நிறுவுவதற்கு அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று மோடி கூறினார்.
மேலும் படிக்க : Mizoram : 8,070 கோடியில் ரயில் பாதை : அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
பிரதமர் மேலும் கூறுகையில், வீடற்றவர்களுக்கு, 7,000 வீடுகளைக் கட்டுவதற்கு உதவி வழங்கப்படுகிறது. மேலும், 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு தொகுப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் கலாச்சார பன்முகத்தன்மையும், உயிரோட்டமும் இந்தியாவிற்கு ஒரு பெரிய பலமாகும். மணிப்பூர் என்ற பெயரிலேயே 'மணி' (முத்து) உள்ளது. இந்த 'மணி' இந்தியாவைப் பிரகாசிக்க வைக்கும். இந்திய அரசு எப்போதும் மணிப்பூரை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுக்க முயற்சித்து வருகிறது. சற்று முன்னர், சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டங்கள் பொதுமக்களின் மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். இந்தத் திட்டங்கள் மூலம் புதிய சுகாதார மற்றும் கல்வி வசதிகள் உருவாக்கப்படும்.
மணிப்பூர் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ளது, இங்கு இணைப்பு ஒரு சவாலாக உள்ளது. மோசமான சாலைகளால் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை நான் புரிந்து கொள்கிறேன். அதனால்தான், 2014-க்குப் பிறகு, மணிப்பூரில் இணைப்புக்கு முக்கியத்துவம் அளித்தேன். அரசு இதற்காக இரு மட்டங்களில் செயல்பட்டு வருகிறது. முதலாவதாக, மணிப்பூருக்கு ரயில் மற்றும் சாலை பட்ஜெட்டை பன்மடங்கு உயர்த்தினோம், இரண்டாவதாக, நகரங்களுடன் கிராமங்களில் உள்ள சாலைகளுக்கும் முக்கியத்துவம் அளித்தோம். கடந்த சில ஆண்டுகளில், மணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 3,700 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, மேலும் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.
சுரசந்த்பூரில் 7,300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மணிப்பூரின் ஒருங்கிணைந்த, நிலையான மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு உறுதிபூண்டு, 3,600 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மணிப்பூர் நகர்ப்புற சாலைகள் மற்றும் கழிவு நீர் மற்றும் சொத்து மேலாண்மை மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், 2,500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஐந்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், மணிப்பூர் இன்ஃபோடெக் மேம்பாடு (MIND) திட்டம், மற்றும் ஒன்பது இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.