
குஜராத் முதல்வராக பதவியேற்ற நாள்
25th Year Of Gujarat First Time CM Narendra Modi : ஆர்எஸ்எஸ்-ல் ஸ்வம் சேவகராக தனது சமூக பணியை தொடங்கிய நரேந்திர தாமோதர் தாஸ் மோடி, பாஜகவில் இணைந்து அரசியல் பணியில் தீவிரம் காட்டினார். கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், முதன்முறையாக 2001ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து 14 ஆண்டுகள் குஜராத் முதல்வராக அவர் பதவி வகித்த போது, அம்மாநிலத்தின் வளர்ச்சி உயரிய நிலையை எட்டியது.
2014ல் பிரதமராக மோடி
2014ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றியை பெற்றதை தொடர்ந்து, பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சக இந்திய மக்களுக்கு நன்றி
2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இதேநாளில், முதல்வராக பொறுப்பேற்றதை நினைவு கூர்ந்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “ 2001ம் ஆண்டு இதே நாளில் தான் குஜராத் முதல்வராக பதவியேற்றேன். எனக்கு தொடர்ச்சியாக ஆதரவையும், ஆசிர்வாதத்தையும் அளித்து வரும் சக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டிற்கான பங்களிப்பை அளிக்கிறேன்
அரசாங்கத்தின் தலைவராக 25வது ஆண்டில் நுழைகிறேன். அதற்காக இந்திய மக்களுக்கு நன்றி நவில்கிறேன்(Narendra Modi As Gujarat CM). இத்தனை ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், என்னை வளர்த்த இந்த நாட்டின் மகத்தான முன்னேற்றத்திற்காகவும் எனது பங்களிப்பினை வழங்கி வருகிறேன்.
இக்கட்டான சூழலில் குஜராத்
இக்கட்டான ஒரு சூழலில் தான் குஜராத் முதல்வர் பொறுப்பை என்னிடம் கட்சி ஒப்படைத்தது. அந்த ஆண்டே ( 2001 ) தீவிர பூகம்பத்தால் குஜராத் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் தீவிர புயல், வறட்சி மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை குஜராத்தை ஆட்டிப் படைத்தது.
இந்தச் சவால்கள் மக்களுக்கான சேவையை செய்யவும், வலுவான குஜராத்தை கட்டமைக்க வேண்டும் என்ற உறுதியையும் உருவாக்கித் தந்தது. உறுதியை மேம்படுத்தி என்னை வழிநடத்தியது.
தாயாரின் அறிவுரை நினைவுகூர்ந்த மோடி
முதல்வராக பொறுப்பேற்ற போது, எனது தாயார் கூறியது நினைவுக்கு வருகிறது. உன்னுடைய வேலை என்ன என்பது எனக்கு புரியவில்லை. ஆனால், இரண்டு விஷயங்களை மட்டும் உனக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஒன்று நீ எப்போதும் ஏழைகளுக்காக மட்டுமே உழைக்க வேண்டும். இன்னொன்று ஒரு போதும் லஞ்சம் வாங்கக் கூடாது.
கடைசி நபரும் பயனடைய உழைக்கிறேன்
எதை செய்தாலும் நாட்டில் உள்ள கடைசி நபரும் பயன்பெறும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் சிறந்த சேவை அளிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். 25 ஆண்டுகளில் பல்வேறு அனுபவங்கள் நிறைந்து இருக்கிறது. குஜராத் மாநில முதலமைச்சராக தாம் பொறுப்பேற்று கொண்ட போது இம்மாநிலத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமான செயல் என்று கூறப்பட்டது. ஆனால், சிறந்த நிர்வாகம் காரணமாக குஜராத் மாநிலம் சக்திவாய்ந்த மாநிலமாக உருவெடுத்தது. இதற்கு ஒன்றுபட்ட முயற்சியே காரணம்.
பிரதமர் வேட்பாளர் - மக்கள் முழு நம்பிக்கை
2013ம் ஆண்டில் தமக்கு பிரதமர் வேட்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அந்த சமயத்தில் நாடு நம்பிக்கை மற்றும் நிர்வாக இடர்பாடுகளால் சிக்கி தவித்து வந்தது என்று அவர் குறிப்பிட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல், வாரிசு அரசியல், கொள்கை முடக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை அளித்தனர்.
11 ஆண்டுகளில் வளர்ச்சி பணிகள்
11 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மக்கள் இயக்கமாக மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களின் மேம்பாட்டிற்காக குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளையோர் சக்தி மற்றும் ஏழைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மேலும் படிக்க : Modi 75: தூய்மை இந்தியா’ 50 கோடி பேர் ஏற்றம்:குப்பை இல்லாத பாரதம்
வறுமையில் இருந்து மக்கள் மீட்பு
இத்தகைய திட்டங்களால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர். மேலும் இந்தியா உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடாக உருவெடுத்துள்ளது. மிகப்பெரிய சுகாதார சேவைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் காரணமாக உலக அளவில் இந்தியா முக்கியத்துவம் கொண்ட நாடாக திகழ்கிறது” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
=======