

நக்சல் பாதித்த சத்தீஷ்கர்
20 ஆண்டுகளுக்கும் மேலாக நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த மாநிலம் சத்தீஷ்கர். தற்போது வரலாற்று மாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது அந்த மாநிலம்.
முடிவுக்கு வந்த நக்சலிசம்
ஆயுதமேந்திய நக்சலிசத்தை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், பழங்குடியின மக்களை வெளி உலகத்துடன் இணைக்கும் முன்னெடுப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பழங்குடி கிராமங்களுக்கு பேருந்துகள்
இதன் ஒரு பகுதியாக பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. 2006ல் பழங்குடியின பகுதிகளுக்கு பேருந்து சேவை முடங்கியது.
ஆயுத குழுக்களால் முடங்கிய போக்குவரத்து
2000-ம் ஆண்டு நவம்பர் 1 அன்று மத்தியப் பிரதேசத்தில் இருந்து சத்தீஷ்கர் தனி மாநிலமாக உருவானபோது, அரசு சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆனால், நக்சலைட்டுகளின் தொடர் தாக்குதல்கள், பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் போதுமான வருவாய் இல்லாத சூழல் காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
பேருந்து வசதியின்றி மக்கள் தவிப்பு
2006-ம் ஆண்டு அரசு பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளாக நம்பகமான பொதுப் போக்குவரத்து இல்லாததால், நக்சல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனர்.
அடர்ந்த காடுகளில் நடந்தே பயணம்
பள்ளி, மருத்துவமனை, சந்தை மற்றும் அரசு அலுவலகங்களை அடைய கிராம மக்கள் பல கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காடுகளின் வழியே நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
கல்விக்கு தடையான நக்சலைட்டுகள்
சத்தீஷ்கர் பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, இங்குள்ள பழங்குடியினரின் எழுத்தறிவு விகிதம் வெறும் 59.1 சதவீதமாக மட்டுமே இருந்தது. பள்ளி செல்ல போக்குவரத்து வசதி இல்லாததே இடைநிற்றலுக்கு முக்கியக் காரணியாக விளங்கியது.
தமிழக அதிகாரியின் முன்னெடுப்பு
இந்தநிலையில் தான் சத்தீஷ்கர் மாநிலப் போக்குவரத்துத் துறைச் செயலாளராக பொறுப்பேற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.பிரகாஷ் . சிறப்பு குழு ஒன்றை அமைத்தார்.
களமிறக்கப்பட்ட தனியார் பேருந்துகள்
பழங்குடியின கிராமங்களுக்கு அரசு பேருந்துகளுக்கு பதிலாக தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கைகோர்த்து ஒரு திட்டத்தை செயல்படுத்தினார்.
குறைந்த கட்டணத்தில் சேவை
தொலைதூரப் பழங்குடியின கிராமங்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்க தனியார் உரிமையாளர்கள் முன்வந்தனர். இதன் ஆரம்பக் கட்டணம் வெறும் ரூ.8 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்களுக்கு இதனால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, மாநில அரசு நேரடி மானியங்களை வழங்கி வருகிறது.
13 மாவட்டங்களில் பேருந்து வசதி
அதன்படி, நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட்ட பஸ்தார் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 108 பேருந்துகள் காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்வதும், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அருகிலுள்ள நகர சந்தைகளுக்கு விளைபொருட்களைக் கொண்டு செல்வதும் எளிதாகியுள்ளது.
மக்களை இணைப்பதே அரசின் நோக்கம்
இது குறித்து பேசிய போக்குவரத்துத் துறைச் செயலாளர் எஸ்.பிரகாஷ், "பழங்குடியின சமூகங்களை மீண்டும் பள்ளிகளோடும் நகரங்களோடும் இணைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம். மக்கள் இப்போது நகர்ப்புறங்களுக்கு அடிக்கடி பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
பழங்குடியினர் வாழ்வில் மாற்றம்
இது அவர்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு நக்சல் அச்சுறுத்தல் காரணமாகப் பேருந்துகளை இயக்க முடியவில்லை. இப்போது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் நிலைமை மிக வேகமாகச் சீரடைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சத்தீஷ்கரில் இயல்பு வாழ்க்கை
ஒரு காலத்தில் துப்பாக்கிச் சத்தங்களும் அச்சமும் மட்டுமே நிறைந்திருந்த சத்தீஸ்கரின் வனப்பகுதிகளில், இப்போது மாணவர்கள் எந்த அச்சுறுத்தலும் இன்றி, புத்தகப் பைகளுடன் பேருந்தில் பயணிக்கும் காட்சி, அப்பகுதி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதை எடுத்துக் காட்டுகிறது.
==================