
பிகார் சட்டசபை தேர்தல் :
Prashant Kishor in Bihar Assembly Elections 2025 : பிகார் சட்டசபை தேர்தல் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் வாக்குப்பதிவும், நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன.
களைகட்டிய தேர்தல் :
சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதால் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளன. வேட்பாளர்கள் தேர்வு, பிரசார திட்டங்கள் என பிகாரில் தேர்தல் திருவிழா களைகட்டி விட்டது.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ்
பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி களம் காணும் நிலையில், ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சி தொடங்கிய பிரசாந்த் கிஷோரும் களத்திற்கு வந்திருக்கிறார். முதன்முறையாக அவரது கட்சி தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
பிரசாந்த் கிஷோரும் போட்டி
இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”பிகார் தேர்தலில் உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் நிச்சயம் உள்ளது. ஆம் நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
9ம் தேதி வேட்பாளர்கள் பட்டியல்
வரும் 9ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறேன். அப்போது நான் எந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பது உங்களுக்கு தெரிய வரும். சட்டசபை தேர்தல் ஜன் சுராஜ் கட்சிக்கு 28 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
28% வாக்குகள் பிரசாந்த் கிஷோர்
கடந்த சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணியும், இண்டி கூட்டணியும் பெற்ற ஓட்டு சதவீதம் 72 சதவீதம் மட்டுமே. பாக்கி உள்ள 28 சதவீதம் ஓட்டுகளும் இம்முறை எங்களுக்குத்தான். இது தவிர, கடந்த முறை தேஜ கூட்டணி மற்றும் இண்டி கூட்டணிக்கு ஓட்டு போட்டவர்களில் தலா 10 சதவீதம் ஓட்டுகள் எங்களுக்கு கூடுதலாக கிடைக்கும் என்று மக்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க : Bihar Assembly Elections 2025 Date : பிகார் தேர்தல் தேதி அறிவிப்பு
எங்களுக்கே வெற்றி - பிரசாந்த் கிஷோர்
அப்படி பார்த்தால் எங்களுக்கு 48 சதவீத வாக்குகள் கிடைக்கும் நிதிஷ்குமாருக்கு இதுதான் கடைசி தேர்தல். மகர சங்கராந்தியை மாநில தலைநகரில் உள்ள அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லத்தில் அவரால் கொண்டாட முடியாது. பிகார் மக்கள் புதிய அத்தியாயத்தை எழுத காத்திருக்கிறார்கள். மாநிலத்தின் எதிர்கால நலன், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக மக்கள் வாக்களிக்கும் போது, மாற்றம் உறுதி” இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
=================