
சபரிமலை ஐயப்பன் கோவில்
இந்தியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலும் ஒன்று. ஆண்டுதோறும், மண்டல பூஜை, மகர விளக்கு காலங்களில் லட்சக் கணக்கானோர் இருமுடி கட்டி வந்து, ஐயப்பனை தரிசித்து செல்வார்கள்.
கேரளாவில் ஜனாதிபதி முர்மு
சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை குடியரசு தலைவர் யாரும் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்து கிடையாது. இந்தநிலையில், கேரளாவில் நான்கு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, திருவனந்தபுரத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலைக்கு சென்றார்.
இருமுடி கட்டி சபரிமலை பயணம்
நிலக்கல்லில் இருந்து கார் மூலம் பம்பை சென்றடைந்த அவர் கணபதி கோயிலில் இருமுடி கட்டிக் கொண்டார். அங்கிருந்து ஜீப் மூலம் சன்னிதானம் சென்ற குடியரசு தலைவர் முர்முவுக்கு ஐயப்பன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அவர் சபரிமலை கோயிலில் 18ம் படிகளை ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். சபரிமலை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஜனாதிபதியிடம் இருமுடியை பெற்றுக் கொண்டார். இருமுடி செலுத்திய குடியரசு தலைவர் ஐயப்பனை பக்தி பரவசத்தோடு வழிபட்டார்.
சபரிமலை சென்ற முதல் ஜனாதிபதி
குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர். பக்தர்கள் தரிசனமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்திய வரலாற்றில் குடியரசு தலைவர் ஒருவர் சபரிமலை சென்று வழிபடுவது இதுவே முதன்முறையாகும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திரளும் சபரிமலைக்கு, நாட்டின் முதல் பெண் பழங்குடியினர் குடியரசுத் தலைவர் என்ற பெருமை பெற்ற முர்முவின் வருகை சிறப்புக் கவனம் பெற்றது