
மக்களவையில் தொடர் விவாதம் :
PM Narendra Modi About India Pakistan War Ceasefire : ’ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக மக்களவையில் 16 மணி நேர விவாதம் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்த விவாதத்தில், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசிய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து உரையாற்றினார்.
140 கோடி இந்தியர்கள் கொண்டாடுகின்றனர் :
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை 140 கோடி இந்தியர்களும் கொண்டாடுகின்றனர். இது இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் தொலைதூரப் பகுதிகளில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களும் துல்லியமாக அழிக்கப்பட்டன. இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் மிரட்டி வருகிறது. இதற்கு எல்லாம் இந்தியா அஞ்சாது என்பதை ஆபரேஷன் சிந்தூரின் மூலம் நிரூபித்து இருக்கிறோம்.
இந்தியாவின் வலிமை - உலகமே வியப்பு :
ராணுவ நடவடிக்கையின் போது இந்தியாவின் ராணுவ வலிமை, தொழில்நுட்பத் திறனை பார்த்து ஒட்டு மொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பாகிஸ்தானை துவம்சம் செய்தன. அந்த நாட்டின் விமானபடைத் தளங்கள் இன்றும் செயல்படவில்லை. அவை இன்னமும் அவசர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கின்றன.
தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவர் :
இதற்கு முன்பு இந்தியாவில் தாக்குதல் நடத்திவிட்டு தீவிரவாதிகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். இப்போது நிலைமை மாறிவிட்டது. தீவிரவாதிகள் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும், வேட்டையாடப்படுவர். ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தன. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தது.
தாய்நாட்டை ஆதரிக்காத காங்கிரஸ் :
ஆனால் காங்கிரஸ் மட்டும் தாய்நாட்டுக்கு ஆதரவு அளிக்கவில்லை. நமது ராணுவத்துக்கு ஆதரவாகவும் அந்தக் கட்சி செயல்படவில்லை. பஹல்காம் தாக்குதலில் அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சி செய்தது. நமது வீரர்களின் மன உறுதியை குலைக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டது. சிலர் பாகிஸ்தானின் ஊதுகுழலாகவே மாறினர். இந்திய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பணிந்தது. போரை நிறுத்த கோரி மன்றாடியதால், மே 10-ம் தேதி போர் நிறுத்தப்பட்டது. இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
மேலும் படிக்க : பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் காங்கிரஸ் : பிரதமர் மோடி சாடல்
யாரும் அழுத்தம் தரவில்லை :
பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவரோ, எந்த நாடோ அழுத்தம் கொடுக்கவில்லை. அவர்களின் அழுத்தத்தால் போர் நிறுத்தப்படவில்லை. இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
=======================