

இந்தியாவின் இரும்பு மனிதர்
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து, இந்தியாவை கட்டமைப்பதில் மிக முக்கிய பங்காற்றியவர்.
சர்தார் வல்லபாய் படேல்
இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த பெரும் வல்லபாய் படேல் அவர்களையே சாரும். குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம், கரம்சாத் என்ற கிராமத்தில் 1875, அக்டோபர் 31ம் தேதி வல்லபாய் படேல் பிறந்தார். இவரது 150வது பிறந்த நாள் இன்று தேசிய விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி மரியாதை
படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
வலிமையான இந்தியாவை கட்டமைப்போம்
இதுகுறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் ”சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்துவோம்” என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி முர்மு புகழாரம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பியவர்.
உறுதிப்பாடு கொண்டவர் படேல்
அவர் தனது அசைக்க முடியாத உறுதிப்பாடு, அசாத்திய தைரியம் மற்றும் திறமையான தலைமை மூலம் நாட்டை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றினார். அவரது அர்ப்பணிப்பும் தேசிய சேவை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, நாம் ஒன்றுபட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுப்போம்” என்று அவர் கூறினார்.
டெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
====