

மேற்கு வங்கம் - மம்தா பானர்ஜி
PM Narendra Modi Speech About TMC in Kolkata Visit : மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. மூன்று முறை முதல்வராக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மீண்டும் ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார்.
இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் பாரதிய ஜனதா கட்சியும் முழு முயற்சியில் இறங்கி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி
இந்தநிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள ராணாகாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை அடிக்கல் நாட்டுவதாக இருந்தது. நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்து அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மோசமான வானிலை
ஆனால், அப்பகுதியில் நிலவிய அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட காட்சித் தெளிவின்மை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் கொல்கத்தாவுக்கு திரும்பியது. பிரதமர் வர இருந்ததால், கூட்டம் நடைபெற இருந்த தாஹேர்பூர் நேதாஜி பூங்காவில் ஏராளமான மக்கள் கூடி இருந்தனர்.
காணொலி மூலம் பேசினார்
எனவே, பொதுமக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்க கூடாது என்பதற்காக, கொல்கத்தாவில் இருந்து பிரதமர் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
வந்தே மாதரம் தந்த மேற்கு வங்கம்
“அன்பு, கருணை மற்றும் பக்தியின் உயிருள்ள உருவகமான ஸ்ரீசைதன்ய பிரபு தோன்றிய பூமி நாடியா. வந்தே மாதரம் என்ற அழியாத பாடலின் பூமி மேற்கு வங்கம். அடிமைப்படுத்தப்பட்ட இந்தியாவில் வந்தே மாதரம் மூலம் ஒரு புதிய உணர்வை உருவாக்கிய பக்கிம் சந்திர சாட்டர்ஜி போன்ற ஒரு ஞானியை இந்த நிலம் நாட்டுக்கு வழங்கியது.
மேற்கு வங்கத்தில் காட்டாட்சி
பிகார் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு மகத்தான ஆணையை வழங்கினர். கங்கை பிகார் வழியாக மேற்கு வங்கத்தை அடைகிறது என்று நான் சொன்னேன். பிகார் மக்கள் காட்டாட்சியை ஒருமனதாக நிராகரித்துள்னர். இப்போது மேற்கு வங்கத்தில் நிலவும் மெகா காட்டாட்சியில் இருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் வளர்ச்சியை தடுப்பதா?
அராஜகம் மற்றும் ஊழல்களால் மூழ்கியிருக்குறது மாநில அரசு. ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் மேற்கு வங்கத்தில் சிக்கித் தவிக்கின்றன. இன்று நான் மனதின் ஆழத்தில் இருந்து ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி மோடியை, பாஜகவை எதிர்க்க விரும்பினால் அது அதன் முழு பலத்துடன் எதிர்க்கட்டும். ஆனால், வங்கத்தின் வளர்ச்சியை, இங்குள்ள எங்கள் சகோதர சகோதரிகளின் வளர்ச்சியை இந்த அரசு ஏன் தடுக்க வேண்டும்?
இரட்டை இன்ஜின் அரசு
மோடியை மீண்டும் மீண்டும் எதிர்க்கலாம். ஆனால், மேற்கு வங்க மக்களை துயரத்தில் ஆழ்த்தாதீர்கள். அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும், கனவுகளை சிதைக்கவுமான பாவத்தைச் செய்யாதீர்கள். வங்கத்தின் அறிவார்ந்த மக்களிடம் இரட்டை இன்ஜின் பாஜக அரசாங்கத்தை அமைத்து, அது எவ்வளவு விரைவாக வங்கத்தை வளர்க்க பாடுபடுகிறது என்பதை பார்க்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஊடுருவலை ஏற்கவே முடியாது
ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க டிஎம்சி எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஊடுருவல் பிரச்சினையை பாஜக எழுப்பும் போதெல்லாம், திரிணாமூல் எங்களுக்கு எதிராக தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள்” இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
===============