குற்றவாளி என தீர்ப்பு
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது .குற்றத்திற்கான தண்டனை விவரம் வரும் மே 5-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது
வழக்கின் பின்னணி விவரம்
கடந்த 2024 மார்ச் 2-ம் தேதி ,முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.
2 நாட்களுக்குப்பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குற்றம் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக 540 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்திருந்தனர்
இன்று விசாரணைக்கு வந்த வழக்கு
இந்த குற்றம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்பாக நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று குற்றாவளி என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் தண்டனை குறித்த விவரங்கள் வருகிற மே 5 ம் தேதி வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.
தீர்ப்பு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்து
அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறியதாவது: பாலியல் நோக்கில் குழந்தை கடத்தல், குழந்தையை அடைத்து வைத்தல், கொலை செய்தல் ஆகிய பிரிவுகளிலும் தடயம் ஆதாரம் மறைத்து வைத்தல் மற்றும் போக்சோ சட்டம் 6-ன் கீழ் கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கு தொடர்பாக பேசிய அவர்
கடந்த 2024 நவம்பரில் சாட்சி விசாரணை தொடங்கியது நிலையில் 54 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன.குற்றம் சாட்டப்பட்ட விவேகானந்தன் தற்கொலை செய்ததால்
அவர் மீது இவ்வழக்கில் இருந்த எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் குற்றம் சாட்டப்பட்டோர் செல்போனில் ஆபாச வீடியோக்கள், உயிர் மாதிரிகள் கிடைத்தாகவும் அவர் தெரிவித்தார்.
===========