

வாக்கு திருட்டு புரளி
Rahul Gandhi Vote Theft : சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ஹரியானாவில் வாக்குத் திருட்டு தெளிவாக செய்யப்பட்டுள்ளது. இருபத்தைந்து லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன, எட்டு வாக்குகளில் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளது. தரவுகளைப் பார்த்த பிறகு, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று தெரிவித்து இருந்தார். மக்களின் எண்ண ஓட்டம், அவர்களின் ஆதாரவு யாருக்கு என்ற உண்மையை உணரவும் அவர் தயாராக இல்லை.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
ராகுல் காந்தியின் வெற்று வாக்கு சோரி குற்றச்சாட்டுகளுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் வயதான பெண்ணின் பெயர் 220 முறை இருப்பதாக அவர் கூறினார். ஆனால், அதற்கு உரிய ஆதாரம் இல்லை. ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தேர்தல் முடிவுகளை நிராகரித்து, அவற்றை கண்டித்துள்ளனர், குறிப்பாக 2014, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மக்களை தேர்தல் முடிவுகளை அவர்கள் ஏற்கவே இல்லை.
முடிவு மாறினால் - காங்கிரஸ் மவுனம்
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த சில கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறவில்லை. ஆனால், இந்தத் தேர்தல்களில் பாஜக முழுமையான வெற்றியைப் பெற்றது.
அதைபோன்று, 2024 தேர்தல்களுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவின் பெரும்பான்மை கிடைக்கும் என்றன. சிலவற்றில் 350க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்தன. ஆனால் முடிவு வேறு மாதிரியாகவே அமைந்தது. அப்போதெல்லாம் காங்கிரஸ் இதுபற்றி பேசவில்லை.
உண்மையை ஏற்க மறுக்கும் ராகுல்
ஜார்க்கண்டில் பாஜக வெற்றி பெறும் என்று சிலர் கணித்திருந்தாலும், தேர்தல் முடிவில் ஜேஎம்எம் ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரஸ் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. ஹரியானாவில் வாக்குச்சீட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. இறுதி முடிவில் தோல்வியை தழுவியது. ஹரியானாவில் வாக்குச்சீட்டுகள் மக்கள் தொகையில் 0.57% மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, 0.57% மக்கள்தொகையை விட 99.43% மக்களின் கருத்து முக்கியமானது என்பதை ஏற்க மறுக்கிறார்.
தவறாக கணிக்கும் ராகுல்
2015 பீகார் தேர்தல்களில், வாக்குச்சீட்டுகளை எண்ணும் நேரத்தில் பாஜக மற்றும் NDA முன்னிலை வகித்தன, ஆனால் இறுதியில் மகா கூட்டணி தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் காந்தி பல முறை பிரதமர் மோடி வாரணாசியில் தோல்வியடையப் போகிறார் என்ற தகவல் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார் - 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களின் பிரச்சாரங்களில் அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஹரியானா விவகாரம் - உண்மை என்ன?
ஹரியானா தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான வாக்குப் பங்கீட்டு வித்தியாசம் 1.18 லட்சம் வாக்குகள். 8 இடங்களில், காங்கிரஸ் வெறும் 22,779 வாக்குகளில் தோல்வியடைந்தது.
குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவது ஒரு கட்சிக்கு மட்டும் உரியதல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஹரியானா தேர்தலில், மிகக் குறைந்த வெற்றி வித்தியாசத்தில் 10 இடங்களை பகுப்பாய்வு செய்தால், அதில் காங்கிரஸ் 6 இடங்களில் வென்றிருக்கும்.
ஆனால், பாஜக 3 இடங்களை மட்டுமே வென்று இருக்கும். நெருக்கமான போட்டி இடங்களில் காங்கிரஸ் தெளிவான வெற்றியாளர் என்பதை இது காட்டுகிறது.
பதில் சொல்லுங்க ராகுல்?
2018 ல் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பாஜக காங்கிரஸை விட அதிக வாக்குகளை பெற்றது. ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்தது. இதற்கு காரணம், முக்கிய தொகுதிகளில் குறுகிய அளவில் தான் வித்தியாசம் இருந்தது. ஏழு முக்கியமான இடங்களை 1,000 வாக்குகளுக்கும் குறைவாக இழந்தது பாஜக. இது ராகுல் காந்தி கமல்நாத்தை முதல்வராக அமர்த்துவதை தடுத்ததா? என்ற கேள்விக்கு அவர்தான் பதில் கூற வேண்டும்.
ஆதாரம் இருந்தா காண்பியுங்க...
ஹரியானாவின் ராய் நகரில் உள்ள 10 வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் ஒரு பெண் 22 முறை வாக்களித்தார் என்கிறார் ராகுல். அவர் கூறியதை பார்த்தால், வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் ஒரே பெயரில் வேறுவேறு நபர்கள் இருக்கலாம். ஒரே நபர் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஓட்டிளித்தார் என்பது உறுதியான ஆதாரம் எதையும் ராகுல் காண்பிக்கவில்லை.
ஜனநாயக செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு
வாக்காளர்கள் வீடு மாறி செல்லுதல், பழைய பதிவுகள் புதுப்பிக்கப்படாததால் வாக்காளர் பட்டியலில் தவறான உள்ளீடுகள் அப்படியே இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதை சரி செய்யத்தான், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) போன்ற செயல்முறைகள் அவசியம், ஆனால் ராகுல் காந்தி, ஜனநாயக செயல்முறைகளை வேண்டுமென்றே எதிர்க்கிறார்.
நீதிமன்றம் செல்ல என்ன தயக்கம்?
வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு பிழையும் வாக்கு திருட்டினை குறிக்காது. ராகுல் காந்தி ஒருபோதும் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. வாக்களிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும்,
அரசியல் கட்சிகள் பங்கு இருக்கிறது. தேர்தல் ஆணைய விதிகளின் படி, வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் 45 நாட்களுக்கு வைக்கப்படுகின்றன. ஆனால், ராகுல் பல மாதங்கள் கழித்து தான் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவரது கட்சி நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ சவாலை தாக்கல் செய்யாவிட்டாலும், தேர்தல் ஆணையம் காணொலியை "அழித்துவிட்டது" என்ற குற்றச்சாட்டினை முன்வைக்கிறது.
ஹரியானா தேர்தல் - காங்கிரஸ் மவுனம்
ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக ராகுல் கூறுகிறார். 2024ல் ஹரியானா தேர்தல்கள் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டன. ஆகஸ்ட் 2 ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் வரைவுப் பட்டியலைப் பகிர்ந்து கொண்டது, 4.16 லட்சத்திற்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளை சரிபார்த்தது, ஆகஸ்ட் 27ம் தேதி இறுதிப் பட்டியலை வெளியிட்டது, அப்போது எல்லாம் காங்கிரஸ் முகவர்கள் எந்த எதிர்ப்பினையும் தெரிவிக்கவில்லை.
தேர்தலின் போது 20,000 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் சுமார் 87,000 வாக்குச் சாவடி முகவர்களால் கண்காணிக்கப்பட்டன. வாக்குகளை
எண்ணும் போது ஐந்து புகார்கள் மட்டுமே பெறப்பட்டன. அப்போது எல்லாம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு குறைகளை சுட்டிக் காட்ட நேரம் இருந்த போதும், எந்த தவறும் இல்லாததால் அமைதி காத்தன என்பதுதான் உண்மை.
சட்டப்பூர்வ நடவடிக்கை - தயக்கம் எதற்கு?
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சட்டப்பூர்வ உதவியை நாடுவதற்குப் பதிலாக, ராகுல் காந்தி ஊடகங்கள் மூலம் இந்திய தேர்தல் முறைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
Gen-Z - குழப்பும் முயற்சியில் ராகுல்
அதுமட்டுமின்றி இப்போது புதிதாக Gen-Z எனப்படும் முதல் தலைமுறை வாக்காளர்களை அவர் தூண்டி விடுகிறார். "உங்கள் எதிர்காலம் உங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது என பயமுறுத்துகிறார். வ்ங்கதேசம், நேபாளத்தில் நடைபெற்ற போராட்டங்களை பார்த்து விட்டு, Gen-Z இளைஞர்களின் உணர்வை ஆயுதமாக பயன்படுத்தி, நாட்டில் அமைதியின்மை உருவாக்க திட்டமிட்டு ராகுல் செயல்படுகிறார். H-Files பத்திரிகையாளர் சந்திப்பில், INC விளக்கக்காட்சியில் இந்தியாவின் Gen-Z இளைஞர்களின் மனதில் நம்பிக்கையின்மையை விதைக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
இளைஞர்களை தூண்டும் ராகுல்
உண்மை என்னவென்றால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றி ராகுல் காந்திக்கு தெரியாது. சவுக்கிதார், சோர் ஹை, சாதி பிரச்சினை மற்றும் அவதூறுகள் போன்ற தோல்வியில் முடிந்த முயற்சிகளுக்கு பிறகு, அதிகாரத்தை கைப்பற்றும் ஆசையில் Gen-Z இளைஞர்களை தனக்காக போராடத் தூண்டுகிறார் ராகுல். .
இளைஞர்களை திசை திருப்ப முடியாது
அவருக்குத் தெரியாத, புரியாத விஷயம் என்னவென்றால், இந்தியாவின் இளைஞர்கள் பிளவுபடுத்தும் அரசியலை ஒதுக்கித் தள்ளிவிட்டு முழு சகிப்புத்தன்மை கொண்டவர்களாக செயல்படுவார்கள். இதுவரை காங்கிரஸ் சந்தித்த100 தேர்தல் தோல்விகள் அவருக்கு அதைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இனியாவது உண்மை நிலையை உணர்ந்து ராகுல் காந்தி செயல்படுவது அவருக்கும், அவரது கட்சிக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் நல்லது.
====