

புதுச்சேரி - ராகுல் பிரசாரம்
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான பரப்புரை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தனிமாநில அந்தஸ்து
”புதுச்சேரிக்கு அடிக்கடி வந்து உங்களை சந்திக்காதது தவறு. புதுச்சேரி மக்களின் அன்புக்காக அடிக்கடி இங்கு வருவதற்கு ஆசைப்படுகிறேன்.
புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மக்களால் ஆளப்படவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை
உள்ளாட்சி தேர்தலை புதுச்சேரியில் நடத்தவில்லை. புதுச்சேரியை அதானிக்கு விற்க பார்க்கிறது பாஜக. காரைக்கால் துறைமுகம் ஏற்கனவே அதானிக்கு விற்கப்பட்டுவிட்டது.
புதுச்சேரி மின்வாரியம் அதானிக்கு விரைவில் விற்கப்பட இருக்கிறது.
கமிஷன் அரசாக இருக்கிறது
ஒவ்வொரு ஒப்பந்தத்துக்கும் புதுச்சேரியில் 30 சதவீதம் கமிஷன். வசூல் ஏஜெண்டாக மாறி, கமிஷன் வாங்குவது மட்டுமே புதுச்சேரி அரசின் வேலையாக உள்ளது.
கமிஷன் வாங்கிக் கொண்டு மதுபான கடைகளுக்கான உரிமங்கள் விற்கப்படுகின்றன.
இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும். தனியார், பொதுத்துறையிலும் 30,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து
புதுச்சேரியில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அறிமுகம் செய்வோம். புதுச்சேரியில் அரசு வேலையில் சேருவதற்கான வயது வரம்பு 40ஆக தளர்த்தப்படும்.
அரசு காப்பீட்டு திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை சிகிச்சை பெற திட்டம் கொண்டு வரப்படும்
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்
எந்த வகையான இருதய பாதிப்போ புற்றுநோயோ எந்த பாதிப்பு என்றாலும் ரூ.20 லட்சம் வரை சிகிச்சை மேற்கொள்ளலாம். புதுச்சேரியில் 6 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம்
எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அரசில் புதுச்சேரி மக்களின் குரல் ஒலிக்க வேண்டும். காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார்.
========