கவுண்டர் டிக்கெட்டிற்கும் 45 பைசாவில் 10 லட்சம் வரை காப்பீடு : நாளை முதல் அமலுக்கு வரும் ரயில்வேயின் புதிய நடைமுறை!

ரயில்வே கவுண்டர்களில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கும் 45 பைசாவில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பயணக் காப்பீடு திட்டத்தை அக்டோபர் 27 முதல் ரயில்வே அமல்படுத்துகிறது.
Railway Counter Ticket Travel Insurance Scheme Update
Railway Counter Ticket Travel Insurance Scheme Updatesource:ai generated
1 min read

Railway Counter Ticket Travel Insurance Scheme Update

ரயில்வே வாரியத்தின் புதிய உத்தரவு

ரயில்வே கவுண்டர்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும் விருப்பத்தின் பேரில் பயணக் காப்பீடு வழங்கும் திட்டத்தை நீட்டித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை நாளை (அக்டோபர் 27) முதல் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் உடனடியாக அமலுக்கு வருகிறது.

முன்பதிவு கவுண்டர்களில் காப்பீடு பெறும் நடைமுறைகள்

ரயில்வே வாரியத்தின் பயணிகள் சந்தைப்படுத்துதல் பிரிவு செயல் இயக்குநர் சிவேந்திர சுக்லா அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் இந்த காப்பீட்டுத் திட்டத்தைப் பெற விரும்பினால், காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை டிஜிட்டல் முறைகளில் மட்டுமே செலுத்த வேண்டும்.

மொபைல் எண் பதிவு

காப்பீடு கோரும் பயணிகளின் மொபைல் எண் கட்டாயமாகம்பதிவு செய்யப்படும். பாலிசி விபரங்கள் பயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

மென்பொருள் மேம்பாடும்

ரயில்வே தகவல் தொழில்நுட்ப மையம் (CRIS) மற்றும் ஐஆர்சிடிசி (IRCTC) ஆகியவை இணைந்து இதற்கான மென்பொருள் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆன்லைன் மற்றும் கவுண்டர் டிக்கெட்டுகளுக்கு ஒரே விதிகள்

இதுவரை ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது செயலி வழியாக ஆன்லைனில் ஈ-டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே விருப்பத்தின் பேரிலான பயணக் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. கவுண்டர் டிக்கெட் பயணிகளுக்கு இந்த வசதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த வேறுபாட்டைக் களையவே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு நடைமுறையில் உள்ள அதே காப்பீட்டு விதிமுறைகளும் நிபந்தனைகளும் இனி கவுண்டர் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும்.

பிரீமியம் தொகை விவரங்கள்

விருப்பத்தின் பேரிலான இக்காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு பயணிக்கான பிரீமியம் தொகையாக 45 பைசா (வரிகள் உட்பட) மட்டுமே வசூலிக்கப்படும்.

  • உதாரணமாக, ஒரே டிக்கெட்டில் 4 பேருக்கு முன்பதிவு செய்து காப்பீட்டைத் தேர்வு செய்தால், மொத்தம் ரூ.1.80 பிரீமியமாக வசூலிக்கப்படும்.

  • ஸ்லீப்பர் வகுப்பிலிருந்து ஏசி முதல் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் தொலைவு அல்லது டிக்கெட் கட்டண வேறுபாடின்றி ஒரே சீரான 45 பைசா கட்டணமே வசூலிக்கப்படும்.

  • 5 வயதுக்கு உட்பட்ட தனி இருக்கை பெறாத குழந்தைகளுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது.

காப்பீட்டுத் தொகை மற்றும் இழப்பீடு விவரங்கள்

  • ரயில் பயணத்தின் போது எதிர்பாராத விபத்து நேரிட்டால், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பின்வருமாறு இழப்பீடு வழங்கப்படும்:

  • மரணம் அல்லது நிரந்தர முழு உடல் பாதிப்பு : ரூ.10 லட்சம் இழப்பீடு.

  • நிரந்தர பகுதி உடல் பாதிப்பு: ரூ.7.50 லட்சம் இழப்பீடு.

  • மருத்துவமனை சிகிச்சைப் செலவுகள்: ரூ.2 லட்சம் வரை பெற முடியும்.

  • உடல் போக்குவரத்து செலவு: உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ரூ.10,000 வழங்கப்படும்.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in