
இந்திய ரயில்வேயின் பிரமாண்டம் :
Indian Railways on 1000 New Trains : உலகின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. சரக்கு ரயில்கள் தொடங்கி, வந்தே பாரத் ரயில்கள் வரை நாள்தோறும் ஆயிரக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.
ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கு இடம் பெயர்க்கப்படுகிறது. 12.54 இலட்சம் பணியாளர்கள் ரயில்வேயில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 67,956 கிலோமீட்டர்களாகும். இது தினமும் 14,444 ரயில்களை இயக்குகிறது.
ரயில் ஏற்றுமதியில் இந்தியா :
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்(Minister Ashwini Vaishnaw), ” உலக அளவில் ரயில் ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பாளராக மாற வேண்டும் என்பதும் உள்நாட்டில் செலவு குறைந்த சரக்கு போக்குவரத்துக்கு முதுகெலும்பாக மாற வேண்டும் என்பதும் இந்திய ரயில்வேயின் நீண்டகால தொலைநோக்கு பார்வை.
5 ஆண்டுகளில் 1,000 ரயில்கள் :
இதன் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம்(New Trains) செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்று புல்லட் ரயில் திட்டத்தை(Bullet Train Project) 2027-ல் தொடங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் கூடுதலாக 35 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெர்மனி நாட்டின் ஒட்டுமொத்த ரயில் பாதைகளுக்கு சமமானது.
உற்பத்தியிலும் சாதிக்கும் இந்திய ரயில்வே :
ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரயில் வேகன்கள் மற்றும் 1,500 இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. ரயில்வே துறைக்கான முதலீடு ரூ.25 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.2.52 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
நெடுஞ்சாலைகள் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவில் 50% மட்டுமே ரயில்வேத்துறை கட்டணமாக நிர்ணயிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சரக்கு போக்குவரத்தில் ரயில்வே துறையின் பங்கு இப்போது 20% ஆக அதிகரித்துள்ளது.
பயணிகளுக்கு அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், அம்ரித் பாரத்(Amrit BharatTrains) மற்றும் நமோ பாரத்(Namo Bharat Trains) என்ற பெயர்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
====