
பண்டிகை காலங்கள் தொடக்கம் :
நாடு முழுவதும் அடுத்து வரும் மாதங்களில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசை கட்டி வர காத்திருக்கின்றன. இத்தகைய காலங்களில் நகரங்களுக்கு குடிபெயர்ந்து வசிக்கும் மக்கள், விழாக்களை விமரிசையாக கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்களுக்கு ரயில் வசதி செய்து தருவது அவ்வளவு எளிதல்ல, நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் பயணிப்பார்கள் என்பதால், வழக்கமான ரயில்களோடு, சிறப்பு ரயில்களையும் ரயில்வே அமைச்சகம் இயக்கி வருகிறது.
சிறப்பு ரயில்கள் இயக்கம் :
பண்டிகைக்கால ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து விடும். ஏனென்றால் இவற்றுக்கான டிமாண்ட் மிக அதிகம். விழா முடிந்து சொந்த ஊரில் இருந்து, தாங்கள் வேலை பார்க்கும் ஊர்களுக்கு திரும்பும்போதும் ரயில் டிக்கெட் எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. இந்த ஏமாற்றத்தை பயணிகள் தவிர்க்கும் வகையில், மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
ரிட்டன் டிக்கெட் எடுத்தால் 20% தள்ளுபடி :
அதன்படி தீபாவளி பண்டிகைகளுக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணியர், 'ரிட்டன் டிக்கெட்'டையும் சேர்த்து முன்பதிவு செய்தால், அதில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது அக்டோபர் 13 முதல் அக்டோபர் 26ம் தேதி வரையிலான பண்டிகை கால ரயில் பயணத்திற்காக, முதலில் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும்.
ரிட்டன் டிக்கெட் எடுப்பது எப்படி? :
இரு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் திட்டத்தின்படி இந்த டிக்கெட்டுக்கான முன்பதிவு வரும் 14ம் தேதி முதல் துவங்குகிறது. அதே நேரம், 'ரிட்டன் டிக்கெட்டு'க்கான முன் பதிவு நவம்பர் 17 முதல் டிசம்பர் 1ம் தேதிக்குள் எடுத்துக் கொள்ளலாம் என ரயில்வே அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ரிட்டன் டிக்கெட் இதற்கு இரு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் கால வரம்பு பொருந்தாது. ஊருக்கு செல்ல முன்பதிவு செய்யும் போதே, ரிட்டன் டிக்கெட்டையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.
அதிவிரைவு ரயில்களுக்கு பொருந்தாது :
இந்த திட்டத்தின்படி புறப்பாடு, திரும்புதலில், அதே பெயர் கொண்ட பயணியர் இடம் பெற்றால் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். 20 சதவீத தள்ளுபடி என்பது திரும்பும்போது மட்டுமே, அதுவும் அடிப்படை கட்டணத்தில் இருந்து வழங்கப்படும். ராஜ்தானி, ஷதாப்தி, துரந்தோ போன்ற ரயில்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தாது எனவும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
====