

Rat steals jewelry worth ₹10 lakh from a shop: CCTV video goes viral!
கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகளை எலி ஒன்று கவ்விச் சென்று பதுக்கிய விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.
துமகூரு டவுன் டவுன் டாக்ஸ் சர்க்கிளில் செயல்பட்டு வரும் 'விஸ்வாஷ் ஜூவல்லரி' என்ற கடையில் வழக்கம்போல் விற்பனைக்காக கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 10 வைர மோதிரங்கள் மற்றும் 2 தங்கச் சங்கிலிகள் காணாமல் போயிருந்தன.
கதவு உடைந்த அடையாளம் இல்லை?
கடையின் பூட்டுகளோ, இரும்பு கதவுகளோ எதுவுமே உடைக்கப்படவில்லை. சுவரில் துளையிடப்பட்ட அடையாளங்களும் இல்லை. இதனால் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் மீது உரிமையாளருக்குச் சந்தேகம் எழுந்ததுள்ளது.
காவல்துறைக்கு செல்லும் முன் கடையிலிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது உண்மை தெரியவந்ததுள்ளது.
கேமராவில் பதிவான காட்சி
இரவில் கடைக்குள் நுழைந்த ஒரு எலி, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மோதிரங்கள் மற்றும் தங்கச் சங்கிலிகளை ஒவ்வொன்றாக தனது வாயில் கவ்வி எடுத்துச் செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தன.
13 மணி நேரப் போராட்டம்
இதையடுத்து, ஆசாரியின் உதவியுடன் கடையில் இருந்த மரப் பலகையாலான அலமாரிகள் பிரித்துப் பரிசோதிக்கப்பட்டன. மரப் பலகைக்கு பின்புறம் இருந்த எலியின் வளைக்குள் காணாமல் போன தங்க, வைர நகைகள் பத்திரமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நகைகளில் ஒட்டப்பட்டிருந்த விலைப் பட்டியலை (Price Tag) மட்டுமே எலி கடித்துத் தின்றிருந்தது.
எலி வளையிலிருந்து நகைகள் மீட்பு
தங்கச் சங்கிலி மற்றும் மோதிரங்களை விழுங்காமல் பத்திரமாகப் பதுக்கி வைத்திருந்த நிலையில், சுமார் 13 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன.
'சுந்தரா டிராவல்ஸ்' பாணியில் தப்பித்த எலி
நகைகள் அனைத்தும் மீட்கப்பட்ட போதிலும், இந்த விசித்திரச் சம்பவத்திற்குக் காரணமான எலி இதுவரை பிடிபடவில்லை எனத் தெரிவித்துள்ள கடை உரிமையாளர், இனி கவனமாக இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவிடம் சிக்காமல் எலி தப்பிப்பது போல, நகைகள் கிடைத்தும் எலி மட்டும் இன்னும் சிக்காமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே நகைச்சுவையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
=====