

Recognition of homemakers' labor at ₹30,000 per month:Supreme Court issues landmark order in accident compensation case!
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.30,000
இல்லத்தரசிகளின் தினசரி உழைப்பு மற்றும் பங்களிப்பை வெறும் வேலை ஆட்களின் பணியாக கருதக் கூடாது என்றும், அவர்கள் தேசத்தை உருவாக்குபவர்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில், உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட இல்லத்தரசிகளின் குறைந்தபட்ச மாத வருவாயை ரூ. 30,000 ஆகக் கணக்கிட வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 2001-ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த மோட்டார் வாகன விபத்தில் 'ரேஷ்மா' என்ற இல்லத்தரசி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய விபத்து நஷ்டஈடு தொடர்பான வழக்கு, கடந்த 25 ஆண்டுகளாக பல நீதிமன்றங்களைக் கடந்து தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, இல்லத்தரசிகளின் உழைப்பை போற்றும் வகையில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தேசத்தின் நலனில் இல்லத்தரசிகளின் பங்கு
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களது தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:
"இல்லத்தரசிகள் மேற்கொள்ளும் சமையல், குழந்தைகளைப் பராமரித்தல், முதியவர்களைக் கவனித்துக் கொள்ளுதல் மற்றும் ஒட்டுமொத்த குடும்ப மேலாண்மை போன்றவை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் இணையற்ற சேவைகளாகும். வீட்டுப் பெண்மணிகள் மனிதகுலத்தின் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு தங்களின் உழைப்பை நல்குகிறார்கள்."
ரூ. 30,000 மாத வருவாய் கணக்கீடு
விபத்து இழப்பீட்டுத் தொகையை தீர்மானிக்கும் போது, வருமானச் சான்று இல்லாத இல்லத்தரசிகளின் மதிப்பைத் துல்லியமாகக் கணக்கிடுவதில் நிலவி வந்த குழப்பங்களுக்கு இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இனி வரும் காலங்களில், இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளை கணக்கில் கொண்டு, அவர்களின் உத்தேச மாத சம்பளமாக ரூ. 30,000 வரை நிர்ணயம் செய்து இழப்பீட்டுத் தொகையை இறுதி செய்யலாம் என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இல்லத்தரசிகளுக்கு பொருளாதார அங்கீகாரம்
பெண்களின் கண்ணுக்குத் தெரியாத வீட்டு உழைப்பிற்குச் சட்டப்பூர்வமாக பொருளாதார அங்கீகாரம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
=====