

BRICS Summit Delhi: ரஷ்ய அதிபர் புதின் டெல்லி வருகை
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை விரிவாக்கும் நோக்கிலும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்தடைந்தார்.
ரஷ்ய உயர்மட்டக் குழுவினரை வரவேற்ற வெளியுறவுத் துறை இணையமைச்ச
டெல்லி விமான நிலையம் வந்தடைந்த புதின் மற்றும் ரஷ்ய உயர் மட்டக் குழுவினரை வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஆகியோர் நேரில் சென்று உற்சாகமாக வரவேற்றனர். பிப்ரவரி 2022-இல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவிற்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அதிபர் புதின் நேரில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் மாநாடு
டெல்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சிமாநாடு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது.
உணவு, எரிசக்தி, சுகாதாரம், பேரிடர் குறைப்பு மற்றும் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதில் இம்மாநாடு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி - புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை
இந்தியாவும் ரஷ்யாவும் 'சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த உத்திசார் கூட்டாண்மை' அடிப்படையில் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர். இதில் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் மக்கள் இடையிலான பரிமாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
======