

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்
Russian President Vladimir Putin India Visit : உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதனால் இந்தியா அதிக லாபம் அடைவதாகவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தக் கோரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அழுத்தம் கொடுத்தார்.
இந்திய பொருட்களுக்கு 50% வரி
ஆனால், இந்தியா அசைந்து கொடுக்காததால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரியை டிரம்ப் விதித்தார். துள்ளார். இதனால் இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதோடு, ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.
நெருங்கிய நட்பு நாடு ரஷ்யா
இந்த சூழலில், இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக திகழ்ந்து வரும் ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று டெல்லி வருகிறார்.இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி வந்ததும் புடினுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து வழங்குகிறார்.
ரஷ்யா - இந்தியா உச்சி மாநாடு
இதைத் தொடர்ந்து நாளை 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு நடைபெறுகிறது. உச்சி மாநாடு நடக்கும் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
குறிப்பாக, இந்தியர்கள் ரஷ்யாவில் பணியாற்றுவதை எளிதாக்குவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் பரந்த கட்டமைப்பின் கீழ் தளவாட ஆதரவு வழங்குவது ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
ரஷ்யாவுக்கு இந்திய பொருட்கள்
இந்தியா அதிகளவு கச்சா எண்ணெயை வாங்கி வருவதால் அதற்கு ஈடாக ரஷ்யாவும் இந்திய பொருட்களை வாங்குவதை அதிகரிக்க அழுத்தம் தரப்படும் என கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிக வரி விதிப்பால், ரஷ்யாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் இந்தியா விரும்புகிறது. எனவே மருந்து, விவசாயம், உணவுப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகளில் ரஷ்யாவிற்கான இந்திய ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என்று தெரிகிறது.
உற்று நோக்கும் மேற்கத்திய நாடுகள்
அதிபர் புதினின் இந்திய பயணம் மேற்கத்திய நாடுகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. காரணம் உக்ரைன் விவகாரத்தில் சமரச முயற்சி மேற்கொண்டால், மேற்கத்திய நாடுகளில் வழிநடத்தும் தலைவர்களே இருக்க மாட்டார்கள் என்று புதின் எச்சரித்து இருந்தார்.
டெல்லியில் பலத்த பாதுகாப்பு
அதிபர் புதின் வருகையையொட்டி டெல்லியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்கு பாதுகாப்புடன் மோப்ப நாய்கள், சிசிடிவி கேமரா, டிரோன்கள், ஏஐ உள்ளிட்டவை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடைசியாக புதின் கடந்த 2021ம் ஆண்டு இந்தியா வந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
====