

Shock for Aam Aadmi Party: 7 MPs Join BJP! "I Was in the Wrong Party" — Raghav Chadha Gets Emotional! பாஜகவில் இணைந்த 7 ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்கள்
மத்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளனர்.
மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்
ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல் உள்ளிட்ட இந்த 7 பேரின் இணைப்பிற்கு மாநிலங்களவைத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
கட்சி மாறினார்களா? பதவி நீக்கம் செய்யப்படுவார்களா?
மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
இதன்காரணமாக, கட்சி மாறிய 7 பேரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் ஏற்கவில்லை.
ராகவ் சத்தாவின் பரபரப்பு விளக்கம்
பாஜகவில் இணைந்த பிறகு முதல்முறையாகக் கருத்து தெரிவித்துள்ள ராகவ் சத்தா, ஆம் ஆத்மி கட்சி குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வீடியோ பதிவு ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
நச்சுத்தன்மை வாய்ந்த சூழல்
"தற்போது இருக்கும் ஆம் ஆத்மி பழைய கட்சி கிடையாது. கட்சிக்குள் நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் நிலவுகிறது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்குக் கூட எனக்குத் தடைகள் விதிக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுக்கால உழைப்பு
மேலும் "அரசியலைத் தொழிலாகக் கருதி நான் வரவில்லை. எனது இளமையின் பொற்காலமான 15 ஆண்டுகளை அக்கட்சிக்காக அர்ப்பணித்தேன்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே நான் தவறான கட்சியில் இருக்கிறேனோ என்று உணர்ந்தேன்" என்றார்.
ஏழு பேர் எடுத்த முடிவு
தொடர்ந்து உணச்சிகரமாக பேசிய அவர், "ஒன்று அல்லது இரண்டு பேர் தவறான முடிவை எடுக்கலாம், ஆனால் 7 பேர் ஒரே நேரத்தில் தவறான முடிவை எடுக்க வாய்ப்பில்லை" என்று குறிப்பிட்டார்.
மேலும் நீண்ட பரிசீலனைக்குப் பிறகே பாஜகவில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.
தேசிய அளவில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு
தற்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளது அக்கட்சிக்கு தேசிய அளவில் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
=====