
இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லாவுடன், நாசாவின் கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ராக்கெட் விண்வெளி நோக்கி சீறிப்பாய்ந்தது.
41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடிமகன் ஒருவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டதால், இது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. 140 கோடி இந்தியர்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தநிலையில், டிராகன் விண்கலத்தில் இருந்து நேரலையில் பேசிய சுபான்ஷூ, “நமஸ்கார் (வணக்கம்) நான் இங்கே பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசைக்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
ஒரு குழந்தைபோல் நடைபயின்று கொண்டிருக்கிறேன். என்னை நானே எப்படி கட்டுப்பாட்டில் வைப்பது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறேன். இங்கு ஒவ்வொரு நிகழ்வையும் மகிழ்ச்சியுடன் ரசிக்கிறேன்.
ஆக்சியம் 4 திட்டம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப விழையும் இந்தியாவின் விண்வெளித் திட்ட முன்னெடுப்பில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ககன்யான் திட்டத்துக்கும் இது ஒரு முன்னேற்றப் பாதைதான்.” இவ்வாறு கூறியுள்ளார்.
இன்று மாலை சர்வதேச விண்வெளி மையத்தை அடையும் அவர் 14 நாட்கள் அங்கு தங்கி இருப்பார். 7க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சுபான்ஷூ மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
=====