

இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதியே செயல்படுத்தப்பட இருந்தது.
இந்த விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா, ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் மேற்கொள்ளப்பட இருந்த இந்தப் பயணம், மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு உள்ளிட்ட காரணங்களால் 6 முறை தள்ளி வைக்கப்பட்டது.
அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு, திட்டிமிட்டபடி, இன்று பிற்பகல் 12.01 மணிக்கு, பால்கன் 9 ராக்கெட் மூலமாக டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
வெற்றிகரமாக பிரிந்த முதல்கட்ட இஞ்சின், பூமிக்கே திரும்பியது.
புவி வட்டப் பாதைக்குள் நுழைந்த பால்கன் ராக்கெட், புறப்பட்ட 8 நிமிடங்களில் முதல் கட்டத்தை கடந்தது. நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடையும்.
இதன்மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய வீரர் ராகேஷ் சர்மா விண்வெளி பயணம் மேற்கொண்டு இருந்தார்.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் முதல் வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார் சுபான்ஷூ சுக்லா.
விண்வெளிப் பயணம் துவக்கத்தின் போது “ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்..” என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முழங்கி, தனது நாட்டுப்பற்றைவெளிப்படுத்தினார்.
அவரது இந்த கர்ஜனை 140 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
தனது விண்வெளி பயணம் குறித்து பேசி சுபான்ஷூ சுக்லா, ”என் அன்பான நாட்டு மக்களே! என்ன ஒரு பயணம்!
41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்வெளியில் இருக்கிறோம். இது ஒரு அற்புதமான பயணம்.
வினாடிக்கு 7.5 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறோம். என் தோள்களில் பொறிக்கப்பட்ட மூவண்ணக் கொடி, நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன் என்பதை சொல்கிறது.
இது என்னுடைய சர்வதேச விண்வெளி மையத்துக்கான பயணத்தின் தொடக்கம் மட்டுமல்ல, இந்திய விண்வெளிப் பயணத்தின் தொடக்கம்.
இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் ஒரு பகுதியாக பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நாம் அனைவரும் சேர்ந்து இந்திய விண்வெளித் திட்டத்தை தொடங்குவோம்.
ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்” இவ்வாறு உணர்ச்சி பொங்க சுபான்ஷு சுக்லா முழங்கினார்.
=====