

ஆளுமை மிக்க நிதிஷ்குமார்
Bihar CM Nitish Kumar Take Oath as Chief Minister : ’நிதிஷ்குமார்’ பிகாரை பொருத்தவரை இது ஒரு தலைவரின் பெயர் மட்டுமல்ல. பிகாரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும், ஒரு ஆளுமை
‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ என்று எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனங்களுக்கு தேர்தல் வெற்றி மூலம் முடிவு கட்டி, ஜோதி பாசு, நவீன் பட்நாயக் போன்றோர் செய்த சாதனையை அதாவது 20 ஆண்டுகள் முதல்வர் என்பதை சமன் செய்து தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார் நிதிஷ் குமார். 10வது முறையாக முதல்வர் பதவியேற்று, தொடர்ந்து பிகாரை வழிநடத்த இருக்கிறார் முன்னா என்று செல்லமாக அழைக்கப்படும் நிதிஷ்குமார்.
கர்ப்பூரி தாக்கூர்
பிகாரில் ’மக்கள் தலைவர்’ என்று அழைக்கப்பட்டவர் கர்ப்பூரி தாக்கூர். பிகார் அரசியலில் சமூக விடுதலைக்கு வித்திட்ட அவரது வழியில் வந்தவர் தான் நிதிஷ்குமார். ஜெயப்பிரகாஷ் நாராயணனை தனது தலைவர் என்று அடிக்கடி கூறும் நிதிஷ், 1951ல் பிறந்தவர். 1977ல் பிகாரில் காங்கிரஸ் எதிர்ப்பு, ஜனதா மீது அதிருப்தி நிலவிய காலத்தில் தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். ராம் மனோகர் லோஹியாவின் மீது அதீத ஈடுபாடு கொண்டவர் நிதிஷ்குமார்.
தேசிய அரசியலிலும் ஆளுமை
சோஷலிஸ சிந்தனைகளோடு தன்னை செதுக்கிக் கொண்ட நிதிஷ் மாநில அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் தனது இருப்பையும், அவசியத்தையும் நிலைநாட்டி மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக இருக்கிறார். இவரை தலைவராக ஏற்க மறுத்தது இந்தியா கூட்டணியின் வரலாற்று பிழை. அதன் காரணமாகவே வட மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பிகார் தேர்தலில் காங்கிரஸ் கரைந்தே போய் விட்டது என்றே கூறலாம்.
10வது முறை முதல்வராகிறார்
10வது முறையாக முதல்வர் பதவியேற்கும் நிதிஷ்குமார், முதல் முறையாக 2000-மாவது மார்ச் 3ம் தேதி அந்த நாற்காலியில் அமர்ந்தார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், அதில் நீடிக்க அவரால் முடியவில்லை. இந்தத் தோல்வியை 2005ம் ஆண்டு தேர்தலில் பெரிய வெற்றியை அறுவடை செய்து முதல்வரானார் நிதிஷ்குமார்.
தொடர்ந்து வெற்றி - முதல்வர் நாற்காலி
2010ம் ஆண்டும் அவருக்கு பிகார் மக்கள் அமோக ஆதரவு அளிக்க, முதல்வர் மகுடம் அவரையே ஏற்றது. 2015ல் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து, ஆர்ஜேடியுடன் கைகோர்த்த போதும், வெற்றி நிதிஷ்குமாரை விட்டு அகலவில்லை. அவரை மீண்டும் முதல்வராக்கி அழகு பார்த்தது.
2017ல், மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் என்டிஏவுக்கு திரும்பிய அவர், 2020 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை வசப்படுத்தி, மறுபடியும் முதல்வரானார். மறுபடியும் 2022ல் என்டிஏவில் இருந்து வெளியேறி ஆர்ஜேடி, காங்கிரஸின் மெகா கூட்டணி சார்பில் முதலமைச்சரானார்.
2024ம் ஆண்டு மட்டும் 278 நாட்கள் ஜேடியு ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்வராக இருந்தார். ஜனவரி 2024ல், நிதிஷ் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் இணைந்து, 9-வது முறையாக முதல்வரானார். இன்று வரை அந்தப் பதவியில் நீடிக்கும் அவர், தற்போதைய தேர்தலில் வரலாற்று வெற்றியை பெற்றதன் மூலம் 10வது முறையாக முதல்வர் பொறுப்பினை ஏற்கிறார்.
மகளிர் திட்டங்கள் மூலம் பெரிய வெற்றி
பிகாரை பொருத்தவரை லாலுவும், நிதிஷ் குமாரும் கர்ப்பூரி தாக்குர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் தான். அதனால் தான் தேர்தலுக்கு முன்னர் அறிவித்த மகளிருக்கான நிதியுதவித் திட்டம் கர்ப்பூரி தாக்குரின் பெயரால் கொண்டு வரப்பட்டது. சுமார் ஒன்றரை கோடி மக்களுக்கு தலா 10 ஆயிரம் நிதியுதவி என்ற இந்தத் திட்டம், 78 சதவீத பெண்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வாக்களிக்க காரணமாக இருந்தது.
2006ம் ஆண்டு தேர்தலில் பாஜக - ஜேடியு கூட்டணி 243 தொகுதிகளில் 206 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதன்பின்னர், 2025 தேர்தலில் 202 தொகுதிகளை அந்தக் கூட்டணி கைப்பற்றியுள்ளது.இதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார் நிதிஷ் குமார்.
இஸ்லாமியர்கள் பெரும் ஆதரவு
பிகார் அரசியல் களம் சாதி, மதத்தால் பிணைக்கப்பட்டது என்றாலும், அனைத்து தடைகளையும் உடைத்து எறிந்து இருக்கிறது என்டிஏ. இஸ்லாமியர்களின் வாக்குகளும் பெருவாரியாக இந்தக் கூட்டணிக்கு கிடைத்ததால் மகாகத்பந்தன் கூட்டணி மண்ணை கவ்வியது. இதற்கு மூல காரணம் நிதிஷ்குமார் செயல்படுத்தி வளர்ச்சி திட்டங்கள் தான்.
சாதி, மத அடையாளம் இல்லாத தலைவர்
பிகாரில் சுமார் 3 சதவீதம் பேரை மட்டுமே கொண்டுள்ள குர்மி இனத்தை சேர்ந்த நிதிஷ்குமார், சாதி, மத வரையறைகளை உடைத்து 10 வது முறையாக முதல்வர் அரியணை ஏற இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவரது சோஷியலிச சிந்தினை மற்றும் செயல்பாடு. மத்தியில் பாஜக ஆட்சிக்கு ஒரு தூணாக இருக்கும் நிதிஷ்குமார், ‘சுசாசன் பாபு’ (Sushashan Babu) என்று பிகார் மக்களால் அழைக்கப்படுகிறார்.
நலத்திட்டங்களால் வளர்ச்சி
தேர்தல் நெருங்கும் வேளையில் மகளிர், இளைஞர்களைக் குறிவைத்து நிதிஷ் அறிவித்த திட்டங்கள் நல்ல பலன் கொடுத்தது. ரூ.10 ஆயிரம் நிதியுதவித் திட்டத்தில் 1.21 கோடி பெண்கள் பலன் பெற்றனர். 125 யூனிட்கள் வரை இலவச மின்சாரம், முதியோர் பென்ஷன் ரூ.1,100 ஆக உயர்வு ஆகியன நிதிஷின் இமேஜை பலமடங்கு உயர்த்தியது.
மோடியுடன் கைகோர்த்த நிதிஷ்
துல்லியமான வெற்றிக்கு, துல்லியமான பிரசாரம் அவசியம். அதை பிரதமர் நரேந்திர மோடியும், நிதிஷ்குமாரும் மிகச்சரியாக முன்னெடுத்து சென்றனர். இதன் பலன், மகாகத்பந்தன் கூட்டணியின் படுதோல்வி, பிரசாந்த் கிஷோர் மண்ணை கவ்வ காரணமாக அமைந்தது. ஈர்ப்பு அரசியல் தான் எப்போதும் வித்தகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் நிதிஷ்.
நலத் திட்டங்கள் செயல்பாடு, சமூக - கொள்கைக் கூட்டணி, அரசியல் ரீதியான செய்தியை மக்களிடம் எளிமையாக எடுத்து செல்வது, வாக்குப்பதிவு முடிவுறும் வரை முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போன்றவை தான் நிதிஷ்குமார் 10முறை முதல்வராக காரணம் என்கின்றனர், அரசியல் நோக்கர்கள்.
=================