”நவ.30 நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்” : தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவெற்ற தீவிரம் : கூடுதல் ஆதரவை பெற, பாஜக தீவிரம்!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
special session of Parliament will be held from November 30 to December 3.
special session of Parliament will be held from November 30 to December 3.source:thamizhalai,ai generated
2 min read

மகளிர் இடஒதுக்கீடு சட்டம்

2023ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

முதலில் தொகுதி வரையறை

ஆனால் 2027ல் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும்.

மக்களவை இடங்களை அதிகரிக்க திட்டம்

எனவே 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக இதை அமல்படுத்த சாத்தியமில்லை. இதில் திருத்தம் செய்யும் வகையில், 2029 மக்களவை தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை, 850 ஆக அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது.

3ல் 2 பங்கு ஆதரவு தேவை

இதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக கடந்த ஏப்ரல் 17ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டு, அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற அவையில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை பலம் தேவை. ஆனால் ஆளும் பாஜவுக்கு போதிய ஆதரவு இல்லாததால் இந்த மசோதா தோல்வி அடைந்தது.

முடிக்கப்படாத நாடாளுமன்ற கூட்டத்தொடர்

அதைத் தொடர்ந்து, மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி முடிவடைந்த நிலையில், கூட்டத்தொடர் முறைப்படி முடிக்கப்படாமலேயே இருந்தது.

தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவே அரசு 100 நாட்களுக்கும் மேலாக மழைக்கால கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வராமலே இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பின.

நவ.30ல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்

இந்நிலையில், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வகைசெய்யும் விதத்தில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா, திருத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி, திங்கள்கிழமை தொடங்க உள்ளது.

தொகுதி வரையறை மசோதா அறிமுகம்?

அத்தியாவசிய அரசு அலுவல்களை மேற்கொள்ளவே இந்த சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தாலும், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 2029ம் ஆண்டு முதல் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றவே இந்த சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவதாக தெரிகிறது.

அவைத் தலைவர்களுக்கு அரசு கோரிக்கை

வரும் 30ம் தேதி மக்களவையைக் கூட்டும்படி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடமும், மாநிலங்களவையை கூட்டுமாறு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடமும் அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

டிச.3 வரை கூட்டத் தொடர்

இது குறித்து ரிஜிஜு தனது எக்ஸ் தள பக்கத்தில், அரசு அலுவல்களின் தேவைக்கு ஏற்ப இரு அவைகளின் அமர்வுகளும் டிசம்பர் 3ம் தேதி நிறைவடையக்கூடும் எனப் பதிவிட்டுள்ளார்.

பெரும்பான்மை கிடைக்கும் - அமித் ஷா

கடந்த 12ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான பெரும்பான்மையை விட 15 முதல் 18 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடி நம்பிக்கை

அரசியலமைப்பு தினமான நேற்று இணையதளத்தில் கட்டுரை வெளியிட்ட பிரதமர் மோடியும் தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியே தீருவோம் என சபதமிட்டுள்ளார்.

இந்த சூழலில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி கூட இருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

361 வாக்குகள் தேவை

நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள 543 இடங்களில் 3 இடங்கள் காலியாக உள்ளன. அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை (361 வாக்குகள்) தேவைப்படுகிறது.

என்டிஏ கூட்டணி பலம் 320

தற்போது பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி பலம் 320 ஆக உள்ளது. இத்துடன் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்துள்ள 20 திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்கள், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா யுபிடி கட்சியின் 6 எம்பிக்கள் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

என்டிஏ கூட்டணிக்கு கூடுதல் ஆதரவு தேவை

இருப்பினும், மசோதாவை நிறைவேற்ற என்டிஏ கூட்டணிக்கு கூடுதல் எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் மக்களவையில் 8 எம்பிக்களை தன் வசம் கொண்டுள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார் பிரிவு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடி உள்ளது.

கடந்த ஏப்ரலில் நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது.

======================