

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் :
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா நோக்கி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா நோக்கி பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயிலில் இரட்டிப்பு கொள்ளளவு :
ரயில்வே வாரியத்தின் அனுமதியின்படி, பெங்களூரு–எர்ணாகுளம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 17, 2026 முதல் 8 பெட்டிகளுக்கு பதிலாக 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
இதன் மூலம் தினசரி நூற்றுக்கணக்கான கூடுதல் பயணிகள் பயனடைய உள்ளனர். ஓணம் பண்டிகை காலத்தில் டிக்கெட் கிடைப்பதில் இருந்த சிரமமும் இதன் மூலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணூருக்கு கூடுதல் சிறப்பு ரயில் :
கேரளாவின் வடக்கு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பெங்களூரு கண்டோன்மெண்ட் – கண்ணூர் இடையே புதிய சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பண்டிகை நாட்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் சிறப்பு ஏற்பாடு :
ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையையொட்டி கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான மலையாளிகள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
இதனால் கேரளா நோக்கி செல்லும் ரயில்களில் மிகுந்த தேவை உருவாகிறது. பல வாரங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிடும் சூழல் நிலவுகிறது.
சிறப்பு ரயிலின் இயக்க நேரம் மற்றும் பயண அட்டவணை :
ரயில் எண் 06567 ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் எண் 06568, ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் நிலையத்தை வந்தடையும்.
கண்ணூர் சிறப்பு ரயில் நிற்கும் முக்கிய நிலையங்கள் :
பெங்களூரு கண்டோன்மெண்ட் – கண்ணூர் சிறப்பு ரயில், கே.ஆர்.புரம் (KR Puram), பங்காரபெட், குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, சோரணூர், திரூர், பரப்பனங்காடி, கோழிக்கோடு, வடகரா மற்றும் தலச்சேரி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.