

India's aviation industry is grappling with ongoing IndiGo crisis, SpiceJet has launched a major winter push to fulfil passengers demand : இந்திய விமானப் போக்குவரத்துத்துறை, இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொடர் குழப்பங்களால் திணறி வருகிறது. தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இண்டிகோ பங்குகள் சரிவு
ரத்து செய்யப்படும் விமானங்களில் பயணிக்க இருந்தவர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகை உடனுக்குடன் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சீராவதில் காலதாமதம் ஏற்படுவதால, இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வருகின்றன.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்
இந்தநிலையில், ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) நிறுவனம் குளிர்காலப் பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது.
தினமும் கூடுதலாக 100 விமானங்கள்
புதன்கிழமை (டிசம்பர் 10) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் (DGCA) ஒப்புதலுக்கு உட்பட்டு, நடப்பு குளிர்கால அட்டவணையில் தினசரி 100 கூடுதல் விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, “முக்கிய வழித்தடங்களில் வலுவான மற்றும் வளர்ந்து வரும் தேவையைப்” பிரதிபலிப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் எழுச்சி
இண்டிகோவின் செயல்பாட்டுக் குறைபாடுகள் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஒரு அரிய வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதே பயன்படுத்தி, ஸ்பைஸ்ஜெட் தனது விரிவாக்கத்தை ஆண்டின் இறுதியில் துரிதப்படுத்தியுள்ளது.
சேவையில் கூடுதல் கவனம்
குத்தகை (damp leases) மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது சொந்த விமானங்களை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறது ஸ்பைஸ்ஜெட். இதன் மூலம் அதன் செயல்பாட்டு திறன் அதிகரித்துள்ளது. மேலும் விமானங்கள் விரைவில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையான வழித்தடங்களில் கூடுதல் சேவை
அதிக தேவை உள்ள வழித்தடங்களில் படிப்படியாகத் திறனைப் பயன்படுத்தி, கூடுதல் விமானங்களை இயக்குவதன் மூலம், தனது நெட்வொர்க் பின்னடைவை சரி செய்து கோள்ளும் முயற்சியில் ஸ்பைஸ்ஜெட் இறங்கி இருக்கிறது. விமானத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது, இணைப்பை வலுப்படுத்துவது, தேவைக்கேற்பத் திறனை சீரமைப்பது இதன் முக்கிய நோக்கம்
பங்குச் சந்தையில் எழுச்சி
தொடர் நடவடிக்கைகள் காரணமாக ஸ்பைஸ்ஜெட்டின் பங்கு விலை 5% வரை உயர்ந்து, அதிகபட்சமாக ஒரு பங்கின் விலை ரூ.36ஐ எட்டியது. இது அந்த நிறுவனத்திற்கு மேலும் தன்னம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. முக்கிய வழித்தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்குவதன் மூலம், அதிக வாடிக்கையாளர்களை கவர ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
======================