

சுங்கச் சாவடிகள் :
நாடு முழுவதும் நான்கு வழி, ஆறு வழி, எட்டு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அமைக்கப்பட்டும் வருகின்றன. இவை தனியார் மூலம் அமைக்கப்படுவதால், இவற்றில் பயணிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள் மூலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பாஸ்டேக் மூலம் கட்டண வசூல் :
ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்தி விட்டு செல்ல காலவிரயம் ஏற்படுவதால், பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் கட்டண வசூல் அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.
ஆண்டு பாஸ்டேக் அறிமுகம் :
இதை எளிமைப்படுத்தும் வகையில், ஆண்டு பாஸ்டேக் சந்தாவை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆகஸ்டு 15ம் தேதி முதல் இது அமலுக்கு வந்திருக்கிறது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி விட்டால், ஓராண்டுக்கு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகபட்சமாக 200 முறை பயன்படுத்த முடியும். எது முதலில் வருகிறதோ அதன் அடிப்படையில் இது செல்லுபடியாகும்.
ஆண்டு பாஸ்டேக், தமிழகம் முதலிடம் :
சுதந்திர தினத்தன்று அறிமுகமான ஓராண்டு பாஸ்டேக் திட்டத்தில், நான்கு நாட்களில் ஏராளமானோர் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. சுமார் 1.50 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்து இருக்கிறார்கள். ஒரு லட்சம் சந்தாதாரர்களுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஹரியானா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
சீரான, விரைவான போக்குவரத்து
ஆண்டு பாஸ்டேக் திட்டம் அமலுக்கு வந்து விட்டதால், இனி வரும் நாட்களில் சுங்கச் சாவடிகள் வழியாக பயணிக்கும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. சீரான பயணத்திற்கு இது வழி வகுக்கும். ===========