

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது.
சுங்க வரி 99% நீக்கம்
வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 99% ஏற்றுமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரிகள் நீக்கப்பட உள்ளன.
இந்திய ஜவுளி, ஆடைகள், தோல் பொருட்கள், காலணிகள், கடல் உணவுகள் மற்றும் மருந்துகளுக்கான வரிகள் முழுமையாக பூஜ்ஜியமாக்கப்பட்டு இருக்கின்றன.
வர்த்தகம் ரூ.60,000 கோடியாக அதிகரிக்கும்
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் ஜவுளித் துறை, ரத்தினங்கள் மற்றும் நகைகள், மருந்துத் துறை, வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற முக்கிய துறைகளுக்கு பெரும் நன்மைகளை வழங்கும்.
இந்தியாவும் வரி குறைப்பு
இந்தியா தனது சந்தையில் 90% இங்கிலாந்து பொருட்களுக்கான வரிகளைக் குறைத்துள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச் விஸ்கிக்கான வரி 150-லிருந்து 75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கார்கள் மற்றும் வாகனங்களுக்கான இறக்குமதி வரியும் படிப்படியாகக் குறைக்கப்படும்.
சமையல் கலைஞர்கள், யோகா பயிற்சியாளர்கள் போன்ற தொழில்முறை நிபுணர்கள் எளிதான பயண வசதிகள் மற்றும் விசா சலுகைகளால் பயன்பெறலாம்.
பரஸ்பரம் வரிகள் குறைப்பு
இந்த ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து விதிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மீதான 70% வரையிலான வரிகள், கடல்சார் பொருட்கள் மீதான 21%-க்கும் அதிகமான வரிகள், பொறியியல் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் மீதான 18 சதவீத வரிகள்...
தோல் மற்றும் காலணி தயாரிப்புகள் மீதான 16 சதவீதம் வரையிலான வரிகள் மற்றும் ஜவுளி வகைகள் மீதான சுமார் 12 சதவீத வரிகள் ஆகியவை பூஜ்ஜியமாக குறைக்கப்படும்.
இது இங்கிலாந்து சந்தையில் இந்திய ஏற்றுமதிகளை கணிசமாக அதிகரிக்கும்.
வரி இல்லாத ஏற்றுமதி
20,000 முதல் 80,000 பவுண்டு வரையிலான விலை வரம்பில் உள்ள இந்திய மின்சார, ஹைபிரிட் மற்றும் ஹைட்ரஜன் பயணிகள் கார்களுக்கு, 6-வது ஆண்டிலிருந்து வரி இல்லாத ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மொத்த ஒதுக்கீடு 15-வது ஆண்டில் 88,000 யூனிட்டுகளாக உயர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடரும்.
11½ லட்சம் கோடி இலக்கு
இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்து இருக்கிறது. . இந்த ஒப்பந்தம் 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.11½ லட்சம் கோடி ($120 பில்லியன் டாலர்) அளவுக்கு இரட்டிப்பாக்கும் இலக்கை கொண்டதாக இருக்கிறது.
====================