

மத்திய பட்ஜெட் 2026
Finance Minister Nirmala Sitharaman will present the Union Budget for the financial year 2026-27 on Sunday, February 1, 2026. This will be the first time in recent history that the budget is presented on a Sunday : மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? அல்லது பிப்ரவரி 2ம் தேதி திங்கட்கிழமை தாக்கல் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்தநிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
பட்ஜெட் கூட்டத்தொடர் கால அட்டவணை
இதில், பட்ஜெட் தொடர்பான முக்கிய தேதிகள் இறுதி செய்யப்பட்டன. அதன்படி,
• ஜனவரி 28 : நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார். இதுவே பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கம்.
• ஜனவரி 29: நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வு அறிக்கை (Economic Survey) நாடாளுமன்றத்தில் தாக்கல்.
• பிப்ரவரி 1 (ஞாயிறு): நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
நிர்மலா சீதாராமன் சாதனை
இந்தமுறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதன் மூலம் நிர்மலா சீதாராமன் பல சாதனைகளை படைக்கிறார்.
1. தொடர்ந்து 9 பட்ஜெட்: இந்தியாவில் தொடர்ந்து ஒன்பது முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் நிதியமைச்சர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும்.
2. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் (10 பட்ஜெட்கள்) மற்றும் பி.சிதம்பரம் (9 பட்ஜெட்கள்) ஆகியோரின் வரிசையில் நிர்மலா சீதாராமன் இடம்பெறுகிறார்.
3. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் 80வது பட்ஜெட் இது.
ஞாயிறன்று பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் வார இறுதியில் தாக்கல் செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. 202-ம் ஆண்டு பட்ஜெட் சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2015 மற்றும் 2016-ல் பிப்ரவரி 28 (சனிக்கிழமை) பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். அதேசமயம் ஞாயிறன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
2017ம் ஆண்டு முதல், புதிய நிதியாண்டு (ஏப்ரல் 1) தொடங்குவதற்கு முன்பே திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த வசதியாக, பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி பிப்ரவரி 28-லிருந்து பிப்ரவரி 1க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
----