
தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் :
சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், நாகப்பட்டினம் இடையே இரண்டு வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக மாநில நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரங்கள்,மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கான சாலைக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
மரக்காணம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை :
இதன் ஒருபகுதியாக மரக்காணம் – புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 332தஐ நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தசாலையில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.
ரூ.2,157 கோடியில் விரிவாக்கம் :
அதன்படி, தமிழகத்தின் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.2,157 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் :
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ” மரக்காணம் -- புதுச்சேரி நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடைந்தால் அது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும். புதுச்சேரியில் சுற்றுலா மேம்படும்; வர்த்தகம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கான புதிய வழிகளும் உருவாகும்.
தடையின்றி சரக்கு போக்குவரத்து :
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இரண்டு மாநில நெடுஞ்சாலைகளுடன் ஒருங்கிணைத்து இந்த மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட ட உள்ளதால், தமிழகம் முழுவதும் பொருளாதார சமூக மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான தடையற்ற இணைப்பு கிடைக்கும். புதுச்சேரியில் உள்ள ரயில் நிலையங்கள், சென்னை, புதுச்சேரி விமான நிலையங்கள், புதுச்சேரியில் உள்ள சிறிய துறைமுகம் ஆகியவற்றை ஒருங்கிணைக்க விரிவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை பெரிதும் பயன்படும்” இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
=================