
இந்தியாவை நெருக்கும் அமெரிக்கா :
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொள்முதலை நிறுத்துமாறு கூறினார். ஆனால், இதை ஏற்க இந்தியா தயாராக இல்லாத நிலையில், முதலில் 25 சதவீத வரி விதிப்பை கொண்டு வந்த டிரம்ப், இப்போது அதை 50 சதவீதமாக உயர்த்தி, அதற்கான ஆணையில் கையெழுத்திட்டிருக்கிறார்.
அமெரிக்காவுக்கு மோடி பதிலடி :
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரதமர் மோடி, விவசாயிகளின் நலனை இந்தியா ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. அதற்கு என்ன விலை கொடுக்கவும் மத்திய அரசு தயங்காது என்று உறுதியளித்து இருக்கிறார். அமெரிக்காவின் வரி விதிப்பை சமாளிக்கும் வகையில், மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் இந்தியா ஆராய்ந்து வருகிறது.
சீனா செல்லும் நரேந்திர மோடி :
இதன் ஒருபகுதியாக வரும் 31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்பதோடு, அதிபர் ஜீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச உள்ளார். அப்போது அமெரிக்காவின் வரிவிதிப்பு பற்றி அவர்கள் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவின் பகையாளியாக கருதப்படும் சீனா, ரஷ்யாவுடன் இந்தியா நல்லுறவை வலுப்படுத்துவதன் மூலம் எதையும் சந்திக்க தயார் என்பதை டிரம்பிற்கு உணர்த்தி இருப்பதாக தெரிகிறது.
ரஷ்யாவில் அஜித் தோவல் :
இந்தசூழலில் அமெரிக்காவுக்கு மற்றொரு பேரிடியாக ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் விரைவில் இந்தியா வர இருக்கிறார். ரஷ்யா சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்தியா வருகிறார் புதின் :
'ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளார்'', என அவர் அறிவித்தார். இதற்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்தியா - ரஷ்யா இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது. இந்த உறவை நாங்கள் மதிக்கிறோம். உயர்மட்ட அளவில் ஆலோசனை நடந்தது. புடினின் இந்திய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கான தேதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக நினைக்கிறேன் எனக் கூறினார். இதனிடையே, இம்மாத இறுதிக்குள் அதிபர் புதின் இந்தியா செல்வார் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
டிரம்பிற்கு செக் வைக்கும் இந்தியா :
சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு, ரஷ்ய அதிபரின் இந்திய வருகை என அடுத்தடுத்த டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தனது ராஜதந்திர செயல்பாடுகளை முடுக்கி விட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
======