
வரிப்போர் மூலம் ட்ரம்ப் பிரச்சினை :
Shashi Tharoor on US Tariff on India : ரஷ்யா, சீனா, ஈரானுடன் இந்தியா வர்த்தகம் செய்து வருவதற்கு அதிபரானது முதலே டோனால்டு ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அமெரிக்க தொழில்கள், வேலைவாய்ப்புகளை சாக்காக வைத்து, பல்வேறு நாடுகள் மீது வரிகளை அவர் அதிகரித்து பிரச்சினை கிளப்பி வருகிறார்.
இந்தியா மீது 25% வரி :
இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இது ஆகஸ்டு ஒன்றாம் தேதியான நாளை முதல் அமலுக்கு வருகிறது. அமெரிகாவின் இந்த முடிவு இந்திய தொழில் நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா விதித்த வரி விதிப்பை கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதன் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசும் தெரிவித்திருந்தது.
இந்தியாவுக்கு சவால், ஆனால் கவலையில்லை :
இந்த நிலையில், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பு குறித்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ இது மிகவும் சவால் மிக்க பேச்சுவார்த்தை. நாம் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பிரிட்டனுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.
அமெரிக்கா மட்டுமே நமது ஒரே வர்த்தக பங்குதாரர் அல்ல. அமெரிக்கா முற்றிலும் நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால், நாம் மற்ற சந்தைகளுக்கு திரும்ப வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க : இந்திய பொருட்களுக்கு ”25% வரி” : நாளை (ஆகஸ்டு.1) முதல் அமல்
இந்தியாவுக்கு வலுவான உள்நாட்டு சந்தை :
இந்தியாவின் வலிமை என்னவென்றால், நாம் சீனாவைப் போல ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அல்ல. நமக்கு வலுவான உள்நாட்டு சந்தை உள்ளது. நல்ல ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா உடன்படவில்லை என்றால், நாம் விலகுவது சிறந்தது, இதனால், இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் வராது. நமது பொருட்களுக்கு உலக சந்தையில் எப்போதும் வரவேற்பு உள்ளது. இதை அமெரிக்காதான் புரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு சசிதரூர் கருத்து தெரிவித்தார்.
======