

Vantara Baby Elephant Raja Airlifted Assam Jamnagar Treatment
விமானம் மூலம் ஜாம்நகர் கொண்டு செல்லப்படும் குட்டி யானை
ஏழு வார குட்டி யானையான ராஜா, தொடை எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அபாய கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் சிறப்பு சிகிச்சைக்காக அசாமிலிருந்து குஜராத்தின் ஜாம்நகர் அருகேயுள்ள 'வந்தாரா' வனவிலங்கு பராமரிப்பு மையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
ஆனந்த் அம்பானியின் வந்தாரா
இதனை ஆனந்த் அம்பானியால் நிறுவப்பட்ட வந்தாரா மையம் தான் செயல்படுத்துகிறது.
'ராஜா' குட்டி யானைக்கு நேர்ந்த சோகம் என்ன?
'ராஜா' என்று அழைக்கப்படும் இந்த ஆண் குட்டி யானை அசாமில் பிறந்துள்ளது. இதன் தாய் யானைக்கும் மிகவும் வயது குறைவு என்பதால், ராஜா பிறந்தபோது ஏற்பட்ட அச்சத்தில் தாய் யானை குட்டியை எட்டி உதைத்துள்ளது. இதில் கீழே விழுந்த குட்டி யானையின் வலது பின்னங்காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது.
குட்டி யானைக்கு உடல்நிலை பாதிப்பு
எலும்பு முறிவு காரணமாகக் குட்டி யானையால் எழுந்து நிற்க முடியாமல் போனதால், தாய்ப்பாலும் சரிவரக் கிடைக்காமல் அதன் உடல்நிலை மிகவும் நலிவடைந்துள்ளது.
விரைவு மீட்புக் குழு சிகிச்சை
குட்டி யானையைப் பராமரிப்பவர்கள் உதவி கோரியதைத் தொடர்ந்து, ராஜா பிறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி 'வந்தாரா' அமைப்பின் விரைவு மீட்புக் குழு அசாம் சென்று சிகிச்சையைத் தொடங்கியது.
எனினும், அதன் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், அதிநவீன சிறப்பு சிகிச்சைக்காக தற்போது ’வந்தாரா’ மையத்திற்கே அழைத்து வரப்படுகிறது.
ஏன் விமானப் பயணம் தேர்வு செய்யப்பட்டது?
சாலை வழியாக குட்டி யானையை கொண்டு செல்ல வேண்டும் என்றால், அசாமின் குவகாத்தியிலிருந்து, குஜராத்தின் ஜாம்நகருக்கு சாலை வழியாக 2,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
ஏற்கனவே குட்டி யானை ஆபத்தான நிலையில் இருப்பதால், நீண்ட தூர சாலை வழிப் பயணம், மேலும் குட்டி யானைக்கு ஆபாயகரமாக மாறலாம். எனவே தான் விமானம் மூலம் சுமார் 4 மணிநேர பயணம் மூலம் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் மூன்றாவது முறையாக
இப்படி இந்தியாவில் இதுபோன்று வனவிலங்குகளை வான் வழியாக இடமாற்றம் செய்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது மூன்றாவது முறையாகும்.
================