

டெல்லியில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற தீபாவளி சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அப்போது பத்திரிகையாளர்களின் அன்றாட பணிகளையும், இந்தியாவின் வளர்ச்சி இலக்கையும் ஒப்பிட்டு பேசினார்.
பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு செய்தியையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற Deadline உடன் வேலை செய்கிறார்கள்.
அதேபோல இந்தியாவுக்கும் ஒரு Deadline இருக்கிறது என்று மோடி குறிப்பிட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான் அந்த Deadline என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைவதற்கு அரசாங்கம் மட்டும் செயல்பட்டால் போதாது.
நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
2047-ஆம் ஆண்டு என்ற இலக்கை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு காத்திருக்காமல்,அதை அடைவதற்கான சிறிய சிறிய இலக்குகளை இப்போதே நிர்ணயித்து செயல்படுத்த வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் ஏற்படும்போதுதான் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க முடியும்.
இந்த நிகழ்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
குறிப்பாக, போதைப்பொருள் பயன்பாடு போன்ற சமூக பிரச்னைகள் குறித்து ஊடகங்கள் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாகவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதிய தொழில்நுட்பங்கள், புத்தாக்க முயற்சிகள், தொழில்முனைவோர் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் இளைஞர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கினால் மட்டுமே 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க முடியும் என்பதே அவரது பேச்சின் நோக்கமாக இருந்தது.
======================