
விநாயகர் சதுர்த்தி :
Vinayagar Chaturthi 2025 Idols Making : நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி(Ganesha Chaturthi Date) வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. அப்போது ஆயிரக் கணக்கான விநாயர்கள் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்துவர். பின்னர் இந்தச் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் :
விநாயகர் சிலைகள்(Ganesha Idols) தொடர்பாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களாகிய நமக்கு பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகின்றன.
களிமண் சிலைகளை பயன்படுத்த வேண்டும் :
அவற்றைப் பாதுகாக்க, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் அரசு குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத களி மண் போன்ற மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை(Ganesha Idols Immersed) நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
இயற்கை பொருட்களால் சிலைகள் :
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்ற, மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க : விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு கருதி மதுரை தவெக மாநாட்டு தேதி ஆகஸ்டு 21க்கு மாற்றம்
ரசாயன கலப்பில்லாத வண்ணங்கள் :
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன் படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன் படுத்தக் கூடாது, சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்” இவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
============