

பிகார் சட்டசபை தேர்தல்
Bihar elections Phase 1 voting :Polling underway for 121 seats : 243 உறுப்பினர்களை கொண்ட பிகார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளிலும் இன்றும், வரும் 11ம் தேதி 122 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.
கடும் போட்டி - யார் முதல்வர்?
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
121 தொகுதிகளில் வாக்குப்பதிவு
18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
7.24 கோடி வாக்காளர்கள்
தேர்தலுக்காக மொத்தம், 45,341 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 36,733 ஓட்டுச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மொத்தமுள்ள 7.24 கோடி வாக்காளர்களில், 3.75 கோடி வாக்காளர்கள் முதற்கட்ட தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இதில், 10.72 லட்சம் பேர் முதன்முறை வாக்காளர்கள் என்பதால், அவர்களின் உரிமை யாருக்கு அரியணை என்பதை தீர்மானிக்கும்.
தேஜஸ்வி, சாம்ராட் சவுத்ரி, தேஜ் பிரதாப்
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், மஹாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி; ஜனசக்தி ஜனதா தள தலைவரும், தேஜஸ்வியின் சகோதரருமான தேஜ் பிரதாப் ஆகியோர் முதற்கட்ட தேர்தலில் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள
1,314 வேட்பாளர்கள் போட்டி
121 தொகுதிகளில், 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தலைநகர் பாட்னாவில் உள்ள திகா சட்டசபை தொகுதியில் அதிகபட்சமாக 4.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஷேகுபுரா மாவட்டத்தின் பர்பிகா தொகுதியில் குறைந்தபட்சமாக 2.32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
14ம் தேதி தேர்தல் முடிவு
அதிகபட்சமாக குர்ஹானி, முசாபர்பூர் ஆகிய தொகுதிகளில் தலா 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து, மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு, 11ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இரு கட்டங்களில் பதிவாகும் ஓட்டுகள், 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
========================