

பிகார் சட்டசபை தேர்தல்
Polling underway for 2nd and final phase of Bihar assembly elections :
பிகாரில் 243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்ற நிலையில், இதுவரை இல்லாத வகையில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின.
பலத்த போட்டி
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சி அங்கு நடக்கிறது. தேர்தலில், ஆளும் கூட்டணி, ஆர்ஜேடி கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறது.
நிதிஷ் vs தேஜஸ்வி
ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், இடையே கடும் போட்டி நிலவுகிறது.
2ம் கட்ட வாக்குப்பதிவு
இந்நிலையில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள சம்பாரண் மேற்கு, கிழக்கு, சீதாமர்ஹி, மதுபனி, சுபவுல், அராரியா உள்ளிட்ட மாவட்டங்களில், 122 தொகுதிகளில், இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6:00 மணி வரை தேர்தல் நடக்கும்.
45,399 வாக்குச்சாவடிகள்
மொத்தம் 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 40,073 வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளன. பதற்றமான இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
3.67 கோடி வாக்காளர்கள்
மொத்தமுள்ள, 7.42 கோடி வாக்காளர்களில், 3.67 கோடி பேர் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்கின்றனர். இதில், 30 முதல் 60 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை, 2.28 கோடி. 18 - 19 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை, 7.69 லட்சம் ஆகும்.
களத்தில் முக்கிய வேட்பாளர்கள்
ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான பிஜேந்திர பிரசாத் யாதவ் - சுபவுல் தொகுதியிலும்; பாஜக அமைச்சர்களான பாபிரேம் குமார் - கயா டவுன், ரேணு தேவி - பெட்டியா, நீரஜ் குமார் சிங் - சத்தாபூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
1,302 வேட்பாளர்கள்
122 தொகுதிகளில், 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நவாடா மாவட்டத்தின் ஹிசுவா தொகுதியில் அதிகபட்சமாக, 3.67 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். லாரியா, சன்பதியா, ரக்சால், திரிவேணிகஞ்ச், சுகவுலி, பன்மகி ஆகிய தொகுதிகளில், தலா 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
14ம் தேதி வாக்கு எண்ணிக்கை
இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நிறைவு பெற்றதும், வரும் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும். பிகாரில் என்டிஏ ஆட்சி தொடருமா? அல்லது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது பிற்பகலுக்கும் தெரிந்து விடும்.
அனைவரும் வாக்களியுங்கள்
2ம் கட்ட தேர்தல் பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து வாக்காளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, பதிவான ஓட்டுக்களின் எண்ணிக்கையில் புதிய சாதனையைப் படைக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக முதல் முறையாக ஓட்டளிக்கும் எனது இளம் நண்பர்கள் தாங்கள் ஓட்டளிப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
=====