

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்
Thiruvananthapuram BJP Mayor VV Rajesh Take Oath : கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி கடும் பின்னடைவை சந்திக்க, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கணிசமான வெற்றியை பதிவு செய்தது.
திருவனந்தபுரம் மாநகராட்சி
101 வார்டுகளை கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பெரும் வியப்பை ஏற்படுத்தின. இங்கு இடதுசாரி கூட்டணி தான் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. ஆனால், முதன்முறையாக இந்தமுறை பாஜக அமோக வெற்றியை ஈட்டியது. கடந்த 45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக வசமானது.
பாஜக அமோக வெற்றி
யாரும் எதிர்பார்க்காத அளவு அந்தக் கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. இடதுசாரி கூட்டணி 29 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனையடுத்து மேயர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் பாஜக சார்பில் விவி ராஜேஷ், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்பி சிவாஜி மற்றும் காங்கிரசின் சபரிநாதன் ஆகியோர் களமிறங்கினர்.
பாஜகவுக்கு 51 பேர் ஆதரவு
மேயர் தேர்தலில் ராஜேஷூக்கு ஆதரவாக 51 ஓட்டுகளும், சிவாஜிக்கு 29, சபரிநாதனுக்கு 19 பேரின் ஆதரவும் கிடைத்தது. ஒரு சுயேச்சை கவுன்சிலர் ராஜேஷ்க்கு ஆதரவு தெரிவித்தார். மற்றொரு கவுன்சிலர் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
மேயரானார் விவி ராஜேஷ்
கொடுங்கனூர் வார்டில் இருந்து வெற்றி பெற்ற விவி ராஜேஷ், 49 வயதானவர். 1996 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். துணை மேயராக பாபனாம்கோடு வார்டு கவுன்சிலர் ஆஷா நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ஓய்வு டிஜிபி ஆர். ஸ்ரீலேகாவுக்கு மேயர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தாலும், அனுபவம் மற்றும் இடஒதுக்கீடு காரணங்களால் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலில் ஸ்ரீலேகா
அதே நேரத்தில், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஸ்ரீலேகாவை வேட்பாளராக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேயராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜேஷ், “ திருவனந்தபுரத்தின் 101 வார்டுகளிலும் வளர்ச்சி ஏற்படுத்தப்படும். திருவனந்தபுரம் வளர்ந்த நகரமாக மாற்றப்படும்,'' எனத் தெரிவித்தார்.
2026ல் கேரள சட்டசபை தேர்தல்
கேரள சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என எதிர்பார்க்கிறது. அக்கட்சியின் ஓ . ராஜகோபால் கடந்த 2016 ம்ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மெமோம் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
வெற்றியை நோக்கி பாஜக வியூகம்
2024 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார். அந்த வரிசையில் தற்போது வி.வி.ராஜேஷ் முதல் முறையாக திருவனந்தபுரம் மேயர் ஆக பதவியேற்றுள்ளார்.
===============