

Only war tension, negotiations and diplomacy in West Asia will provide the right solution - Union Minister Jaishankar!
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து ஈரானும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்முஸ் நீரிணையையும் மூடி விட்டது.
ஈரான் எச்சரிக்கை
ஹார்மோஸ் நீரிணையை கடக்க முயன்றால் கப்பல்கள் தீக்கிரையாக்கப்படும் என்றும் எச்சரித்தது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு
இந்நிலையில், ஈரான், இஸ்ரேல் அமெரிக்க போர் காரணமாக இந்தியாவின் நிலைப்பாடு என்பது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
சிறந்த தீர்வு தருவது இதுதான்
இதுகுறித்து மாநிலங்களவை விளக்கம் அளித்த அவர், ஈரான் இஸ்ரேல், அமெரிக்க போர் பதற்றம் தணிவதற்கு பேச்சுவார்த்தையும் , ராஜ தந்திரமும் தான் சரியான தீர்வைத் தரும் என்று கூறியுள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
முன்னதாக, நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது, மேற்கு ஆசியாவின் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் பற்றாக்குறை,
எரிசக்தி விலை உயர்வு போன்ற சவால்களை இந்தியா சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இதுகுறித்து விதி எண் 176 இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர், மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து இந்தியாவின் கவலையை ஏற்கெனவே அறிக்கை மூலமாக வெளிப்படுத்தியதாகவும், அனைவரும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிரதமர் உன்னிப்பாக கவனிக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி மேற்கு ஆசியாவின் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் ராஜ்ஜிய ரீதியிலான அணுகுமுறை மூலம் தான் மேற்காசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேற்கு ஆசியா போர் பதற்றம் நீடிக்கும் இந்நேரத்தில், சரியான விதத்தில் பதிலளிக்க ஏதுவாக அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்தியர்களை மீட்கும் பணி
வளைகுடா நாடுகளில் மட்டும் ஒரு கோடி இந்தியர்கள் வேலை செய்வதாகவும் படிப்பு மற்றும் வேலை என சில ஆயிரம் இந்தியர்கள் ஈரானில் வசிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேற்காசிய பகுதிகள் நமது எரிசக்திப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் பல நிறுவனங்கள் அங்கு உள்ளதாகவும், அதனால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும், ஸ்திரத்தன்மை இல்லாத சூழலும் மிக முக்கியப் பிரச்சனைகளாக பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
ஈரான், இஸ்ரேல், அமெரிக்க மோதல் காரணமாக நாம் இரண்டு கப்பல் பணியாளர்களை இழந்துவிட்டதாகவும் இதுவரையில் ஒருவரை காணவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
இந்தியாவின் துரித நடவடிக்கை
மேலும் இந்திய மாணவர்கள் தெஹ்ரானில் இருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்வதற்கு இந்திய தூதரகம் வசதி செய்துள்ளதாகவும், அதேபோல் ஈரானில் உள்ள இந்தியர்கள் அர்மீனியா வழியாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போர் சூழல் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தினாலும் இந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள இந்திய மக்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பதில் நாங்கள் (இந்தியா) உறுதிபூண்டுள்ளோம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.