

தமிழகத்தில் தவெக ஆட்சி
தமிழக சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது, இளம் தலைமுறையினரின் அதீத அரசியல் ஆர்வம், இந்த வெற்றியை சாத்தியமாக்கியது.
சி.வி. சண்முகம் ராஜினாமா
இந்த தேர்தலில் அதிமுக எம்பியான சி.வி. சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்தார். 2028ம் ஆண்டு மே 29ம் தேதி அவருடைய பதவிக்காலம் இருப்பதால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாடு உட்பட 24 இடங்களுக்கு வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது.
ஜூன் 8ஆம் தேதிவரை மனுக்களை தாக்கல் செய்யலாம். ஜூன் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும்.
என்டிஏவுக்கு அதிக இடங்கள்
பல மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கும், அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கும் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது.
ஆந்திரா (4), குஜராத் (4), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (3), ராஜஸ்தான் (3), ஜார்க்கண்ட் (2), மணிப்பூர் (1), மேகாலயா (1), அருணாச்சலப் பிரதேசம் (1), மிசோரம் (1) மற்றும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு இடைத்தேர்தல் தொகுதிகள் என மொத்தம் 24 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. ஆந்திராம், மேகாலயா மற்றும் மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.
17 இடங்களில் என்டிஏ வெற்றி?
24 இடங்களில் நடைபெறும் தேர்தலில் 17 இடங்களில் என்டிஏ வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் ராஜ்யசபாவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் பலம் கணிசமாக உயரும்.
தமிழகத்தில் இருந்து செல்வது யார்?
தமிழகத்தை பொருத்தவரை ஒரு இடத்திற்கு தவெக வேட்பாளரை நிறுத்தி, முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்குமா? அல்லது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
==================